தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு! வெய்யில் எப்படி இருக்கும்?
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அடுத்த ஒரு சில நாள்களுக்கு இயல்பான வெப்பநிலையில் 2- 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்துக் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை மற்றும் மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
நாளை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப். 28 முதல் மே 2 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெய்யில் எப்படி இருக்கும்?
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒரு சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இன்று முதல் ஏப்.30 வரை உயரக்கூடும்.
இன்று முதல் ஏப். 30 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

