600 பேருக்கு வேலை... திருவண்ணாமலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா!

திருவண்ணாமலையில் அமையவுள்ள மினி டைடல் பூங்கா குறித்து...
திருவண்ணாமலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா.
திருவண்ணாமலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா.
Published on
Updated on
2 min read

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆக. 1)  தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் திருவண்ணாமலையில்  ரூ. 37 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 63,200 சதுர அடி கட்டுமான பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து, அதனை விரைவில் எய்திடும் வகையில் அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு  பல்வேறு முன்னெடுப்புகளை  மேற்கொண்டு வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக, மத்திய அரசின் 2024-25 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2000-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொலைநோக்கு பார்வையுடன் சென்னை தரமணியில் டைடல் பூங்காவை நிறுவி,  திறந்து வைத்தார். இது மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை மாபெரும் வளர்ச்சி பெற  வித்திட்டது. 

’அனைவரையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சி’ என்பதை முக்கிய கொள்கையாகக் கொண்டுள்ள  தமிழ்நாடு அரசு,  தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் பரவலாக விரிவுபடுத்தும் விதமாக,  மதுரை மாநகரில் ரூ.314 கோடி மதிப்பீட்டில், 5.34 லட்சம் சதுரடி கட்டுமான பரப்பளவுடனும், திருச்சிராப்பள்ளி, பஞ்சப்பூரில் ரூ.403 கோடி மதிப்பீட்டில், 5.58 லட்சம் சதுர அடி கட்டுமான பரப்பளவுடனும்,  புதிய டைடல் பூங்காக்களை  நிறுவ முதல்வர் ஸ்டாலினால் 18.02.2025 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

இவற்றின் கட்டுமானப்பணிகள் பல்வேறு முன்னேற்ற நிலைகளில் நடைபெற்று வருகின்றன. மேலும், 5.57 லட்சம் சதுர அடி கட்டுமான பரப்பளவில்,  21 தளங்களுடன் கட்டப்பட்ட  பட்டாபிராம் டைடல் பூங்கா,  முதல்வர் ஸ்டாலினால் 22.11.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்களை மேலும் விரிவுபடுத்தும் வகையில், ஓசூரில் ரூ.400 கோடி செலவில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பூங்கா உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டங்கள் ஒவ்வொன்றும் 6000 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்  சார்ந்த வல்லுநர்களுக்கான  வேலைவாய்ப்புகளை உருவாக்கும். 

இவை மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கவும், புத்தொழில்களை ஆதரிக்கவும், டைடல் நியோ லிமிடெட் என்ற சிறப்பு நோக்க நிறுவனத்தின் மூலம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில்,  50,000 சதுர அடி முதல் 1,00,000 சதுர அடி கட்டுமான பரப்பளவுடன் மினி டைடல் பூங்காக்களை அமைக்க அரசு முடிவெடுத்து, விழுப்புரம் மற்றும் திருப்பூர் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு 24.06.2022 அன்றும், வேலூர் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு 18.02.2023 அன்றும், தூத்துக்குடி, தஞ்சாவூர், மற்றும் சேலம் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு 19.05.2023 அன்றும் முதல்வர் ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டது. அவற்றில் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று விழுப்புரம் மினி டைடல் பூங்கா  17.02.2024 அன்றும்,  தஞ்சாவூர் மற்றும் சேலம் மினி டைடல் பூங்காக்கள் 23.09.2024 அன்றும்,  தூத்துக்குடி மினி டைடல் பூங்கா 29.12.2024 அன்றும் முதல்வர் ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்டன.

திருப்பூர், வேலூர் மற்றும் காரைக்குடி மினி டைடல் பூங்காக்களின் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இவை விரைவில் செயல்பட துவங்கும். மேலும், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான வடிவமைப்பு பணிகள் முடிவுற்று ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள்  தொடங்கப்படவுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலையில்  ரூ. 37 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 63,200 சதுர அடி கட்டுமான பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். 

இந்த மினி டைடல் பூங்காக்கள் மூலம் அப்பகுதிகளில் வசித்துவரும் பல்லாயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அவர்கள் வசித்துவரும் மாவட்டங்களிலேயே தங்கி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலை பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுவதுடன், அப்பகுதிகள் சமூக-பொருளாதார வளர்ச்சியடையவும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மேம்படவும் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com