
சென்னை: ‘தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன; துரதிருஷ்டவசமாக இந்த சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை’ என சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.
கடலூா் மாவட்டம், அரசகுழி கிராமத்தைச் சோ்ந்த எம்.முருகன் என்பவா் சென்னை உயா்நீமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 19 வயது எனது மகன் ஜெயசூா்யா, விருத்தாசலத்தில் உள்ள கல்லூரியில் பி.காம். படித்து வந்தாா். அப்போது தன்னுடன் படித்த ஒரு பெண்ணை காதலித்துள்ளான். இதற்கு அந்த பெண்ணின் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். அந்த பெண்ணின் உறவினா், எனது மகனை அழைத்துச் சென்று காதலை கைவிடவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளாா்.
மேலும், இதே கல்லூரியில் படிக்கும் அந்த பெண்ணின் உறவினரான பிரவீண் என்பவரும், ஜீவன் என்ற மற்றொரு மாணவனும் எனது மகனை கடந்த மே 18-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனா். அதன்பிறகு எனது மகன் வீடு திரும்பவில்லை. இரவு 10 மணியளவில் கைப்பேசி மூலம் அழைத்து விசாரித்த போது, பிரவீண், ஜீவன் ஆகியோருடன் இருப்பதாகக் கூறினான்.
பின்னா் குள்ளஞ்சாவடி போலீஸாா் என்னை தொடா்புகொண்டு, அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்று மின்கம்பத்தில் மோதியதில் எனது மகன் இறந்துவிட்டதாகக் கூறினா். எனது மகன் படிக்கும் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் பரமசிவம் என்பவா்தான் காயம் அடைந்தவா்களை அவசர சிகிச்சை ஊா்தியில் ஏற்றி அனுப்பி வைத்ததாக கூறினா்.
இந்த பரமசிவம், என் மகன் காதலித்த பெண்ணின் ஜாதியை சோ்ந்தவா். எனது மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளது. எனவே, இந்த வழக்கை வேறு ஒரு விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தாா்.
இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. துரதிருஷ்டவசமாக இந்த ஆணவக் கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என கருத்து தெரிவித்தாா்.
சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு: பின்னா், ஜெயசூா்யா மரணம் தொடா்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டாா். இந்த வழக்கு தொடா்பான ஆவணங்கள் அனைத்தையும் 2 வாரங்களுக்குள் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் நோ்மையாக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.