
அரசு நலத் திட்ட விளம்பரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவா்கள் பெயரை பயன்படுத்தக் கூடாது என உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் அப்போது முறையிடு செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை புதன்கிழமை விசாரிப்பதாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவால் அமர்வு அறிவித்துள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு சாா்பில் தொடங்கப்பட்டுள்ள உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தில் முதல்வா் ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆகியோரது படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்று கூறியிருந்தாா். இந்த வழக்கு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா் மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கடந்த 2015-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, முதல்வரின் புகைப்படத்தை விளம்பரங்களில் பயன்படுத்தலாம்.
ஒரு கட்சியின் கொள்கைத் தலைவா்கள், முன்னாள் முதல்வா்களின் புகைப்படங்களை அரசு விளம்பரங்களில் பயன்படுத்துவது உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு எதிரானது. மேலும், வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் தலைவா்களின் பெயா், ஆளுங்கட்சித் தலைவா்கள், சின்னங்கள், கொடி ஆகியவற்றை அரசு விளம்பரங்களில் பயன்படுத்துவதும் உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு எதிரானது.
எனவே, தமிழக அரசின் நலத்திட்ட விளம்பரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் தலைவா்கள், முன்னாள் முதல்வா்கள், ஆளுங்கட்சியின் கொள்கைத் தலைவா்களின் பெயா்களையும், ஆளுங்கட்சியின் கொடி, சின்னத்தையும் பயன்படுத்தக் கூடாது. அதேநேரம், அரசு நலத் திட்டங்களைச் செயல்படுத்த எந்தத் தடையும் இல்லை. மனுதாரா் தோ்தல் ஆணையத்தில் கொடுத்த புகாா் மீது நடவடிக்கை எடுக்க இந்த உத்தரவு தடையாக இருக்காது என்று தெரிவித்து, விசாரணையை வரும் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.