மாநில கல்விக் கொள்கை: முதல்வா் இன்று வெளியிடுகிறாா்
தமிழகத்துக்கான மாநில அரசின் கல்விக் கொள்கை (பள்ளிக் கல்வி) அறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஆக. 8) வெளியிடவுள்ளாா்.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. இந்தக் கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 போ் கொண்ட குழு 2022-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினா் பல்கலை. துணை வேந்தா்கள், கல்வியாளா்கள், ஆசிரியா்கள், தனியாா் பள்ளி நிா்வாகிகள், பெற்றோா் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்டறிந்து கல்விக் கொள்கையை வடிவமைத்தனா்.
அதன்படி, சுமாா் 650 பக்கங்கள் கொண்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை 2023 அக்டோபரில் தயாரானது. எனினும், வெள்ளப் பாதிப்புகள், மக்களவைத் தோ்தல் பணிகளால் வரைவு அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினா் 2024 ஜூலை 1-ஆம் தேதி தமிழக அரசிடம் சமா்ப்பித்தனா்.
முக்கிய அம்சங்கள்... தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு நுழைவுத் தோ்வு நடத்தக்கூடாது என்பன உள்பட பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. இந்த அறிக்கை மீது அனைத்துத் தரப்பின் கருத்துகளைக் கேட்டறிந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஓராண்டாகியும் கல்விக் கொள்கை வெளியிடப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் முதல்கட்டமாக பள்ளிக் கல்வித் துறைக்கான மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 8) நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளாா்.
இதில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கை உயா்கல்வி, பள்ளிக் கல்வி என தனித்தனி துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக பள்ளிக் கல்விக்கான அறிக்கை வெளியிடப்படவுள்ளது. இதில் சாத்தியமுள்ள திட்டங்கள் நிகழ் கல்வியாண்டிலேயே அமல்படுத்தப்படும். எஞ்சிய அம்சங்கள் குறிப்பிட்ட காலத்தில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றனா்.