
‘முதல்வரின் தாயுமானவர் திட்டம்’ இந்தியாவுக்கே முன்மாதிரி என தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் விடியோ வெளியிட்டுள்ளார்.
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்களை வழங்கக்கூடிய ‘முதல்வரின் தாயுமானவர்’ திட்டத்தை சென்னை தண்டையாா்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவிருக்கிறார்.
தனியாக வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருள்களை நேரடியாக அளிக்கும் இந்தத் திட்டத்தில், 20,42,657 முதியவர்கள், 1,27,797 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 21,70,454 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்துப் பார்த்து செய்துவருகிறது. அந்த வரிசையில் எனது மனசுக்குப் பிடித்த திட்டமாக இந்த ‘முதல்வரின் தாயுமானவர்’ திட்டம் உருவாகியுள்ளது.
வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருள்களை நேரடியாக அளிக்கும் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அரசின் சேவைகளை வீடுகளுக்கேச் சென்று கொடுப்பது, இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி.
திட்டத்தை அறிவித்தவுடனே நமது கடமை முடிந்துவிட்டதாக நாம் நினைப்பது இல்லை. அந்தத் திட்டத்தின் பயன் கடைக்கோடி மனிதருக்கும் சென்று சேருகிறதா என்பதைக் கண்காணிப்பதையும் என்னுடைய கடமையாகக் கருதுகிறேன்.
பொருள்கள் வாங்குவதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். தாயுமானவர் திட்டத்தை 34,809 தியாய விலைக் கடைகளில் செயல்படுத்தப்போகிறோம்; 70 வயதுக்கு மேற்பட்ட 20,42,657 மூத்த குடிமக்கள், 1,27,797 மாற்றுத் திறனாளிகள் என 21,70,454 பேர் இத்திட்டத்தின் மூலம் பயனடையப் போகிறார்கள்.” என விடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.