
தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தில் அமைந்துள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் முதல்வரோ திமுகவினரோ அவர்களைக் கண்டுகொள்ளவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தில் அமைந்துள்ள மூன்று மீன் கழிவு ஆலைகளால் கடந்த நான்கு ஆண்டுகளாக, அந்தப் பகுதியில் மண்வளம், நிலத்தடி நீர் மற்றும் காற்று ஆகியவை மாசுபட்டு மக்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த ஆலைகளை மூடக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் திமுக அரசு கண்டுகொள்ளாததால் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலையும் புறக்கணித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல் மக்கள், இளைஞர்கள் மீதே திமுக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இதனை அடுத்து, கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் முதல், சுமார் 450 நாட்களுக்கும் மேலாக, சுற்றுச்சூழல் மாசுபடக் காரணமாக இருக்கும் மீன் கழிவு ஆலைகளை மூடக் கோரி, பொட்டலூரணி மக்கள் போராடி வருகின்றனர்.
ஆனால், திமுக அரசோ, அமைச்சர்களோ, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியோ, யாரும் இந்த மக்களைக் கண்டுகொள்ளவில்லை. காலாகாலமாக, மக்களிடையே பாகுபாடு பார்க்கும் திமுகவின் செயல்பாடு வன்மையான கண்டனத்துக்குரியது. தனது கட்சிக்காரர்கள் சம்பாதிக்க மக்கள் நல்வாழ்வைப் பணயம் வைக்கும் அலட்சியப் போக்கை முதல்வர் மு.க. ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும். உடனடியாக, பொட்டலூரணி பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடக் காரணமாக இருக்கும் மீன் கழிவு ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.