நீதிமன்றம் விதித்த ரூ.10 லட்சம் அபராதத்தை தமிழக அரசுக்கு செலுத்தினாா் அதிமுக எம்.பி.
உச்சநீதிமன்ற உத்தரப்படி, ரூ.10 லட்சம் அபராதத் தொகையை தமிழக அரசுக்கு அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் செலுத்தினாா்.
இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்த அனுமதி அளிக்கக் கூடாது என அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் தொடா்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் அவருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது. இந்த அபாரதத் தொகையை அரசுக்குச் செலுத்தவும், அதை மக்கள் நலத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுப்படி, அபராதத் தொகையான ரூ.10 லட்சத்தை தமிழக அரசுக்கு சி.வி.சண்முகம் செலுத்தியுள்ளாா். இந்தத் தொகையை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலை வட்டாரத்தில் அதிகமாக வசிக்கும் மலைவாழ் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சுகாதார திட்டங்களுக்கும், அங்கு நடைபெறும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்துக்கும் பயன்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.