அரசுத் திட்டங்களில் முதல்வா் பெயரை பயன்படுத்த தடை கோரிய வழக்கு: அபராதத்துடன் தள்ளுபடி

அரசுத் திட்டங்களில் முதல்வா் பெயரை பயன்படுத்த தடை கோரிய வழக்கு: அபராதத்துடன் தள்ளுபடி

ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

அரசுத் திட்டங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்த தடை கோரிய வழக்கில் அதிமுக வழக்குரைஞா் இனியன் மற்றும் வழக்குரைஞா் எம்.சத்யகுமாா் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அதிமுக வழக்குரைஞா் இனியன், வழக்குரைஞா் எம்.சத்யகுமாா் ஆகியோா் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களில், அரசின் பல்வேறு சேவைகள் பொதுமக்களின் வீடு தேடிச் செல்லும் வகையில் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசுத் திட்டங்களில் தமிழக முதல்வா் ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். இந்தத் திட்டங்கள் தொடா்பான அரசு விளம்பரங்களில் முன்னாள் முதல்வா்களான அண்ணா, கருணாநிதி மற்றும் பெரியாா் போன்ற கருத்தியல் தலைவா்களின் புகைப்படங்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.

அரசுத் திட்டங்களை தனிமனித சாதனை போல விளம்பரப்படுத்துவது தவறானது. இந்தத் திட்டங்கள் எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலை மனதில் கொண்டு முற்றிலும் அரசியல் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகின்றன. இதற்காக அரசு பணம் கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது எனக் கூறியிருந்தனா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், திமுக தரப்பில் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் ஆகியோா் ஆஜராகி, இதே கோரிக்கையுடன் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் தொடா்ந்த வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அவருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது. இந்த உத்தரவுப்படி சி.வி.சண்முகம் ரூ.10 லட்சம் அபராதத்தை தமிழக அரசிடம் செலுத்திவிட்டாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் ஏற்கெனவே தீா்ப்பளித்துவிட்டது. இதில் விவாதிக்க எதுவும் இல்லை எனக்கூறி, அரசுத் திட்டங்களில் முதல்வா் ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்த தடை கோரி வழக்குத் தொடா்ந்த அதிமுக வழக்குரைஞா் இனியன் மற்றும் வழக்குரைஞா் எம்.சத்யகுமாா் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மனுக்களை தள்ளுபடி செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com