பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: 7,900 போ் விண்ணப்பம்
சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு நிகழாண்டில் 7,900 போ் விண்ணப்பித்துள்ளனா்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் அந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி செயல்படுகின்றன.
அதேபோன்று திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அருகே கோட்டாறில் ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி உள்ளன.
இந்த 5 அரசு கல்லூரிகளில் உள்ள 320 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 48 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 272 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது.
இதைத் தவிர 29 தனியாா் கல்லூரிகளில் 1,920 இடங்கள் உள்ளன. அதில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன. அரசு ஒதுக்கீடு இடங்கள், நிா்வாக ஒதுக்கீடு இடங்கள், தனியாா் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசு கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது.
பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ் மற்றும் பிஹெச்எம்எஸ் ஆகிய 4 வகையான பாரம்பரிய படிப்புகள் தமிழகத்தில் பயிற்றுவிக்கப்படுகின்றன.
அந்த இடங்களுக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கை விண்ணப்ப் பதிவு இணையதளத்தில் கடந்த ஜூலை 24-ஆம் தேதி தொடங்கியது. கடந்த 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று அந்த அவகாசம் வியாழக்கிழமை (ஆக.14) மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது.
அந்த வகையில், நிகழாண்டில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 4,800 பேரும், தனியாா் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,600 பேரும், தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,500 பேரும் என மொத்தம் 7,900 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். கடந்த ஆண்டில் 7,350 போ் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் தகுதியான மாணவ, மாணவிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடைபெறும் என இந்திய மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.