
தருமபுரி மாவட்டத்துக்கான 5 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று(ஆக. 17) வெளியிட்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக. 17) தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தருமபுரி மாவட்டத்துக்கான 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “இத்தனை லட்சம் மக்களுக்கு இத்தனைத் திட்டங்களை தருமபுரிக்காக செய்திருக்கிறோம்; தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். இனியும் நாங்கள் தான் செய்யப் போகிறோம். இவ்வளவு திட்டங்களை சொல்லிவிட்டு, இப்படிப்பட்ட இவ்வளவு பெரிய விழாவில் புதிய அறிவிப்புகளை வெளியிடாமல் இருக்க முடியுமா? அதனால், சில அறிவிப்புக்களை நான் வெளியிட விரும்புகிறேன்.
முதல் அறிவிப்பு - சித்தேரி ஊராட்சியில் இருக்கக்கூடிய 63 மலைக்கிராமங்களில் வசிக்கின்ற பழங்குடியின மக்களும், கொளகம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிசெட்டிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் வாழுகின்ற பொதுமக்களும், பல்வேறு பணிகளுக்கு பாப்பிரெட்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்வதற்கான தூரம் அதிகமாக இருக்கும் என்று சொல்கிறார்கள். அதனால், இந்த கிராமங்கள் எல்லாம் அருகாமையில் இருக்கின்ற அரூர் வருவாய் வட்டத்தில் இணைக்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு – ஒகேனக்கல் - தருமபுரியை இணைக்கக் கூடிய மாவட்ட நெடுஞ்சாலையில், தருமபுரியில் இருக்கின்ற ஆட்டுக்காரம்பட்டி முதல் பென்னாகரம் வரை உள்ள 25 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைப்பகுதி, தற்போதுள்ள இருவழித்தடத்தில் இருந்து நான்கு வழித்தடமாக, 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கட்டமாக மேம்படுத்தப்படும்.
மூன்றாவது அறிவிப்பு – நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் பரிகம் ஊராட்சியில், பரிகம் முதல் மலையூர் வரை உள்ள வனச்சாலை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தார்ச் சாலையாக மேம்படுத்தப்படும். நல்லம்பள்ளியில் இருக்கின்ற அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஏழரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்படும்.
நான்காவது அறிவிப்பு – அதிக அளவில், புளி உற்பத்தி செய்கின்ற தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், 11 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஒருங்கிணைந்த புளி வணிக மையம் அமைக்கப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு – அரூர் நகராட்சியில் வாழ்கின்ற மக்களின் நலன் கருதி, வள்ளிமதுரை குடிநீர் வழங்கல் திட்டம் புதிய குழாய்களை பதித்தும், 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தும், 15 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்” என்றார்.
இதையும் படிக்க: வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.