
சென்னையில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று(ஆக. 19) தொடக்கி வைத்தார்.
முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சாா்ந்தோரின் நலனுக்காக ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ என்ற புதிய திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க ரூ. 1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என முதல்வர் முன்னதாக அறிவித்திருந்தார்.
இத்திட்டத்தில், முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களின் மறுமணம் ஆகாத கைம்பெண்கள், படை பணியின்போது இறந்த படைவீரர்களின் கைம்பெண்கள், தகுதியுள்ள முன்னாள் படைவீரர்களின் மகன்கள் மற்றும் மணமாகாத, கணவனை இழந்த மகள்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். அதேபோன்று, இத்திட்டத்தின் கீழ் முன்னாள் படை வீரர்களுக்கு குறைந்தபட்ச வயது இல்லை.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், ஏற்கெனவே மத்திய, மாநில அரசால் வழங்கப்படும் இதைப் போன்ற திட்டங்களில் பயன் பெற்றிருக்கக் கூடாது. ஏற்கெனவே அரசாணையில் நீக்கம் செய்யப்பட்ட விவசாய நடவடிக்கைகள் சார்ந்த தொழில்கள் மற்றும் பட்டுப்புழு, ஆடு, மாடு, கோழி, மீன் மற்றும் பன்றி வளர்ப்பு தொழில்கள் தற்போது சோ்க்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.