
அனுமன்தான் முதல் விண்வெளி வீரர் என்று மத்திய முன்னாள் அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதற்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஹமீர்பூர்(ஹிமாச்சல்) மக்களவைத் தொகுதி உறுப்பினருமான அனுராக் தாக்குர், தேசிய விண்வெளி நாளையொட்டி தனது தொகுதியில் உள்ள ஒரு பள்ளியின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்போது மாணவர்களிடம் அனுமன்தான் முதல் விண்வெளி வீரராக இருக்க முடியும் என்று கூறியுள்ளார். மேலும், பாடப்புத்தகங்களை தாண்டி, நமது தேசத்தின் மரபுகள் மற்றும் அறிவைப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு எதிர்கட்சியைச் சேர்ந்த பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் திமுக எம்.பி. கனிமொழியைத் தொடர்ந்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில்,
"முப்பத்தி முக்கோடி தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும்போது அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாக்கூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல,
பாஜகவினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது.
நீல் ஆம்ஸ்ட்ராங் பெயரை அறிவியல் பாடத்திலிருந்து நீக்க பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்" என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.