
ஶ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் நாட்டு துப்பாக்கி வைத்து மான் வேட்டையாட முயன்ற காவலரை கைது செய்த வனத் துறையினர், தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் ஶ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வனச்சரகர் செல்லமணி தலைமையிலான வனத்துறையினர், ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது திங்கள்கிழமை நள்ளிரவில் ரெங்கர் கோயில் பீட் கொலைகாரன் பாறை அருகே துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்ட இடத்திற்கு வனத்துறை சென்ற போது, அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர்.
இருவர் தப்பி ஓடிய நிலையில் துப்பாக்கி உடன் இருந்த ஒருவரை துரத்தி பிடித்த வனத்துறையினர், வனச்சரக அலுவலகம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கைதானவர் மம்சாபுரத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் தனுஷ்கோடி(40) என்பதும், அவர் ஶ்ரீவில்லிபுத்தூர் வட்டம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த வனத் துறையினர், தனுஷ்கோடியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய மம்சாபுரத்தைச் சேர்ந்த ராமராஜ், ஶ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்: புள்ளி மானை வேட்டையாடுவதற்காக சுட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக மான் தப்பிய நிலையில், துப்பாக்கி சத்தம் கேட்டு சென்று தனுஷ்கோடியை கைது செய்தோம்.
தப்பி ஓடிய இருவரை தேடி வருகிறோம் எனத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.