
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் 10 பேர் மீது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, பாரபத்தியில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெற்றது.
தவெக மாநாடு நடைபெறும் திடலில் அன்று காலை முதலே ஏராளமான தொண்டர்கள் குவியத் தொடங்கினர். கொளுத்தும் வெயில் சவாலாக இருந்தபோதும் லட்சக்கணக்கான மக்கள் கூடியதால் மாநாடு ஒரு மணி நேரம் முன்னதாகவே தொடங்கியது. மாநாட்டில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் மாநாட்டில் விஜய் நடந்து வருவதற்காக 'ரேம்ப் வாக் மேடை' அமைக்கப்பட்டிருந்தது. பவுன்சர்கள் புடைசூழ விஜய் அதில் நடந்து சென்றபோது தொண்டர்கள் பலரும் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற நோக்கில் தடுப்பின் மீது ஏறி விஜய்யை நோக்கிச் சென்றனர்.
அப்போது மேடையின் மீது ஏறிய ஒரு இளைஞரை பவுன்சர் ஒருவர், குண்டுக்கட்டாகத் தூக்கி கீழே வீசினார். இந்த விடியோ இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மூங்கில்பாடியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மகன் சரத்குமார் என்ற இளைஞர், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், தனது தாயாருடன் நேரில் சென்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் 10 பேர் மீது புகாரளித்துள்ளார்.
அந்தப் புகாரில், “தலைவரைப் பார்த்த ஆர்வத்தில் நடைமேடையில் ஏறியவுடன், பவுன்சர்கள் என்னும் குண்டர்கள் என்னை அலேக்காகத் தூக்கி எறிந்தனர். இதில், எனது மார்பக வலது விலா எலும்பு அடிப்பட்டு வலி அதிகமாகவுள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறேன்.
இதுகுறித்து கட்சித் தலைமை பேசுவதாக கூறி தவெக பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் என்னிடம் சமரசம் பேசினார்கள். ஆனால், உதவிக்குகூட யாரும் என்னை நேரில் வந்து பார்க்காமல் தவறிவிட்டனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த விவகாரத்தில் அஜய் என்ற இளைஞர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பவுன்சர்கள் தூக்கி வீசிய இளைஞர் நான் தான். சரத்குமார் என்பவர் பொய்த் தகவலைப் பரப்பி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.