ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு! 22 பேர் குற்றவாளி

ஆம்பூர் கலவர வழக்கில் முதல் வழக்குகளிலிருந்து இதுவரை 22 பேர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் காவலர்கள் குவிப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் காவலர்கள் குவிப்பு
Published on
Updated on
2 min read

ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளி என திருப்பத்தூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

ஆம்பூர் கலவர வழக்கில், 191 பேர் கைது செய்யப்பட்டு, 12 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 22 பேர் குற்றவாளிகள் என்றும், மற்றவர்களை விடுதலை செய்தும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பழனி. இவரது மனைவி பவித்ரா (25). பள்ளிகொண்டாவில் தோல் காலணி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் காணாமல் போனாா். அவரை கண்டுபிடித்து தரக்கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் அவரது கணவா் பழனி ஆட்கொணா்வு மனுதாக்கல் செய்தாா்.

இதுதொடா்பாக பள்ளிகொண்டா காவல் நிலைய அப்போதைய காவல் ஆய்வாளா் மாா்டின் பிரேம்ராஜ், பவித்ராவுடன் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஆம்பூரை சோ்ந்த ஷமீல் அஹமத் (26) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையின்போது, ஷமீர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், விசாரணையில் இருந்த ஷமீல் அஹமதை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என எழுதி வாங்கிக்கொண்டு உறவினா்கள் வசம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனா். திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவா் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா்.

இது பற்றி அறிந்த ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் 500-க்கும் மேற்பட்டோா், கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி ஆம்பூா் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். ஷமில் அகமதுவை தாக்கிய காவல் ஆய்வாளா் உள்பட 6 காவலா்கள் மீது கொலை வழக்குப்பதிந்து, கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் ஊா்வலமாக சென்று சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

போராட்டம் கலவரமாக மாறியது, காவல் துறை வாகனங்கள், பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், பேருந்துகள், லாரிகளுக்கு தீ வைக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டன. 54 காவலா்கள் பலத்த காயமடைந்தனா். அதனால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஆம்பூா் கலவரத்தில் தொடா்புடைய 191 போ் மீது காவல் துறையினா் 12 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, 100-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினா் கைது செய்து வேலூா், கடலூா், சேலம் மத்திய சிறைகளில் அடைத்தனா். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்தது.

வழக்கில் கைதான 118 பேருக்கு சென்னை உயா்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணையின் தீா்ப்பு திருப்பத்தூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆக. 26 வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தீர்ப்பு 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு, இன்று தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com