ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் திருவுருவப் படத்தை திறந்துவைக்கவுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் மகள் திருமண விழாவை தலைமையேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நடத்தி வைத்தார்.
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
”பிகாரில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சிறப்பு வாக்காளர் திருத்தம் பல பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு எதிராகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சகோதரர் ராகுல் காந்தி பேரணி மேற்கொண்டிருக்கிறார்.
பிகாரின் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வை பெற்று, அதனை தடுத்து நிறுத்த அனைத்து முயற்சிகளையும் என்.ஆர். இளங்கோ மேற்கொண்டு வருகிறார்.
நாளை ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு ஒருவார காலம் பயணம் மேற்கொள்ளவுள்ளேன். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்துக்கு ரூ. 10 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டை ஈர்த்துள்ளோம். வெளிநாடு பயணங்களின் போது தமிழகத்தின் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் ஆர்வம் காட்டுவதை பார்த்துள்ளேன்.
தற்போதைய பயணம் பற்றி நாளை விமான நிலையத்தில் விளக்கமாக தெரிவிப்பேன்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப் படம் திறக்கப்படவுள்ளது. அதனை திறந்து வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பெரியாரின் கருத்துகள் உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர் உலகளவில் அங்கீகரிக்கப்படுவது நமது தமிழ்நாட்டுக்கு பெருமை." எனத் தெரிவித்தார்.
இந்த திருமண விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், தமிழக அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.