ஞானசேகரன் மீதான தடுப்புக் காவல் நடவடிக்கையை நீட்டிக்க வேண்டுமா? - உயா்நீதிமன்றம் கேள்வி
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசேகரன் மீதான குண்டா் தடுப்புச் சட்ட நடவடிக்கையை நீட்டிக்க வேண்டுமா? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோட்டூா்புரத்தைச் சோ்ந்த ஞானசேகரன் என்பவா் கைது செய்யப்பட்டாா். பின்னா், அவா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஞானசேகரனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்க சென்னை மாநகரக் காவல் ஆணையா் உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஞானசேகரனின் தாய், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிா் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
இந்த நிலையில், ஞானசேகரன் மீதான குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் அடிப்படையில்தான், ஞானசேகரன் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா். தற்போது அந்த வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை நீட்டிக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினா்.
அப்போது காவல் துறை தரப்பில், ஞானசேகரன் மீது மற்ற குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அவா் செய்த குற்றச் செயல்களால் பொது அமைதிக்குப் பாதிப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் விரிவாக வாதிட இருப்பதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.