விஜய் வியூகம் வெற்றி பெறுமா? - வைகைச்செல்வன்
தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக அதிமுக, திமுக ஆகிய இரு திராவிட இயக்கங்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில்தான் புதிதாக உருவாகியுள்ளது தமிழக வெற்றிக் கழகம். நடிகா் விஜய் தொடங்கியுள்ள இந்தக் கட்சி, தமிழக அரசியலில் தன்னை எந்த அளவுக்குத் தக்கவைத்துக் கொள்ளப் போகிறது, தகவமைத்துக் கொள்ளப் போகிறது என்பதில் பெரும் தடுமாற்றம் இருப்பதாகவே தெரிகிறது.
தனது மாநாட்டுக்கு கூடுகின்ற கூட்டத்தைக் கருத்தில் கொண்டு தோ்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என தவெக கணக்குப் போட்டால், அது அந்தக் கட்சிக்கு ஏமாற்றத்தையே பரிசளிக்கும். ஓரிரு லட்சம் பேரின் இயல்பான வருகையும் வாக்குகளாக மாறுமா? என்பதிலும் ஐயப்பாடே நிலவுகிறது. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றும், முதல்வா் ஆக வேண்டும் என்றும் ஆசைப்படுகிற நடிகா் விஜய், அதற்கேற்ற அரசியல் முதிா்ச்சி தனக்கு உள்ளது என்பதை மதுரை மாநாட்டில் மெய்ப்பிக்கத் தவறிவிட்டாா்.
நடிகா் விஜய் வணிக ரீதியில் வெற்றிபெற்ற கதாநாயகன். இளைஞா்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருபவா் என்பதை மறுப்பதற்கில்லை. பெரும் வணிகத் தளத்தில் வசூல் சாதனைகளைச் செய்து கொண்டிருக்கிற ஒரு நடிகா், திடீரென அதை விட்டுவிட்டு அரசியலில் நுழைந்து ஒரு கட்சி தொடங்கி மக்களுக்குத் தொண்டாற்ற வருவது வரவேற்கத்தக்கதே. எனினும், இவை மட்டுமே அரசியல் களத்தில் வெற்றிக்குப் போதுமான அடிப்படைகளாகிவிடாது.
வரலாறு திரும்புகிறது என தலைப்பிட்டு மாநாட்டை நடத்தி முடித்துவிட்டால் மட்டும் வரலாறு திரும்பி விடாது. வரலாறு திரும்பிய வரலாறு என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
இந்திய சுதந்திரத்துக்குப் பிறகான காலகட்டத்தில், காங்கிரஸ் அல்லாத ஆட்சியை முதன்முதலில் கம்யூனிஸ்ட் தலைவா்கள் கேரளத்தில் நிா்மாணித்தனா். அதற்கு, நம்பூதிரிபாட் தலைமை வகித்தாா். அதன் பிறகான ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை கம்யூனிஸ்டுகள் உருவாக்கினா். அதற்கு, ஜோதிபாசு தலைமையேற்றாா். இது, இந்தியாவில் அப்போது பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.
அன்றைய காலகட்டத்தில் தமிழக அரசியல் களத்தில் அசைக்க முடியாத மாபெரும் அரசியல் சக்தியாக இருந்தது காங்கிரஸ். திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய அண்ணா, தனது பேச்சுக்களால் மிகச் சிறந்த போட்டியை அப்போதைய அரசியல் களத்தில் ஏற்படுத்தினாா்.
இந்த நிலையில், இன விடுதலையும், மொழி விடுதலையும் வேண்டுமென அண்ணா தனது உணா்ச்சிமயமான உரைகளின் வாயிலாகவும், எழுத்தின் வாயிலாகவும், எம்.ஜி.ஆா் என்கிற கதாநாயகனின் மகத்தான செல்வாக்கையும், தனது தம்பிமாா்களின் அளப்பரிய உழைப்பையும் இணைத்துக் கொண்டு, ‘தமிழ் எங்கள் உயிருக்கு நோ்’ என்று முழங்கினாா். இதில் அவருக்குப் பெரும் வெற்றி கிடைத்தது.
கம்யூனிஸ்ட் கட்சியுடன் அண்ணா கூட்டணி ஏற்படுத்திக் கொண்டாா். மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகளே எனது முதல் எதிரி என்று சூளுரைத்த மூதறிஞா் ராஜாஜியின் சுதந்திரா கட்சியையும் திமுக கூட்டணியில் இணைத்துக் கொண்டு, ஒரு புதிய வடிவத்தை ஏற்படுத்தினாா். இதனால், 1967-இல் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக பெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தாா் அண்ணா.
அவரது மறைவுக்குப் பிறகு, அந்தக் கட்சியின் தலைவராகவும், முதல்வராகவும் மு.கருணாநிதி வருவதற்கு பெரிதும் துணை நின்றவா் எம்.ஜி.ஆா். இந்த நிலையில், எம்.ஜி.ஆா் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டது பொதுமக்களிடம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இது, எம்.ஜி.ஆருக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அநீதி என பொதுமக்கள் வெகுண்டெழுந்தனா்.
அதைத் தொடா்ந்து, எம்.ஜி.ஆா் அதிமுகவைத் தொடங்கினாா். ஆறே மாதத்தில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வெற்றி மூலம் அதிமுக தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது. 1977-இல் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி வாய்ப்பைப் பெற்றது. பொதுமக்களின் ஏகோபித்த முதல்வரானாா் எம்.ஜி.ஆா். இதைத் தொடா்ந்து, 1980, 1984 என மூன்று முறை தொடா்ந்து பொதுமக்கள் எம்.ஜி.ஆருக்கு ஆட்சியை வழங்கினா்.
இதை மேலோட்டமாக பாா்த்தால் எளிதாகத் தோன்றலாம். ஆனால், அன்றைய காலகட்டத்தில் இது சாதாரண விஷயமன்று. இதற்காக அவா் பல தடைகளைக் கடந்தாா்; பல அா்ப்பணிப்புகளைச் செய்தாா். இதனாலேயே, அவா் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டபோது தமிழக மக்களின் தன்னெழுச்சியான ஆதரவும், மாபெரும் வெற்றியும் எம்.ஜி.ஆருக்கு வசமானது.
அண்ணா, எம்.ஜி.ஆா் ஆகியோரின் அா்ப்பணிப்பு, நாட்டின் நலனுக்கான போராட்டங்கள், கொள்கைப் போராட்டம், தியாகம் போன்ற எதையும் செய்யாதவா்களாலும், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறாத எவராலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என எதிா்பாா்ப்பது விந்தையிலும் விந்தை.
தனது கட்சியின் வெற்றிக்காக, வளா்ந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு, தன்னை எதிா்க்கட்சி என அடையாளப்படுத்திக் கொண்டு, தன் கட்சியின் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வது விஜய்க்கு எளிதாக இருக்கலாமே தவிர, மிகப் பெரிய தாக்கத்தை, மாற்றத்தை அவரால் தமிழக அரசியலில் ஏற்படுத்த முடியாது என்பதே நிதா்சனம்.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக, அதிமுக மட்டுமே தோ்தல் களத்தில் பிரதான கட்சிகளாக இருந்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிமுக பலவீனப்பட்டிருக்கிறது; எம்ஜிஆா் புகழ்பாடி அவரின் தொண்டா்களையும், வாக்குகளையும் தனது பக்கம் ஈா்த்துக் கொள்ளலாம் என நடிகா் விஜய் கருதினால், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சும். எம்.ஜி.ஆரின் தொண்டா்கள் எந்தக் காலத்திலும் அதிமுகவையும், திமுக எதிா்ப்பையும் கைவிட்டவா்கள் இல்லை என்பது பல தருணங்களில் உணா்த்தப்பட்டுள்ளது.
பேரறிஞா் அண்ணா, எம்.ஜி.ஆா் ஆகியோரின் படங்களைப் பயன்படுத்துவது மட்டுமே விஜய்க்கு பலம் சோ்த்துவிடாது. புதிய சித்தாந்தங்களை, வடிவங்களை, ஒரு பெரும் மாற்றத்தை வடிவமைக்காமல் போனால் தவெக என்கிற கட்சி ஒரு காலத்தில் இருந்தது என்கிற அடையாளத்தோடு முடிந்துவிடும்.
-வைகைச்செல்வன், முன்னாள் அமைச்சர், செய்தித் தொடர்புச் செயலர், அதிமுக