
பொறுப்பு டிஜிபி நியமனம் மூலம் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளை திமுக அரசு புறக்கணித்திருக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிராக, தமிழகக் காவல்துறைக்கு, பொறுப்பு டிஜிபி நியமனம் செய்திருக்கிறது திமுக அரசு.
மாநிலக் காவல்துறை தலைவர் நியமனம் தொடர்பாக, உச்சநீதிமன்றம், மிகவும் தெளிவான விதிமுறைகளை வகுத்துள்ளது. டிஜிபி பொறுப்பில் இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதம் முன்பாகவே, அடுத்த டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறது. சங்கர் ஜிவாலை காவல்துறை தலைவராக நியமிக்கும்போதே, அவர் ஓய்வு பெறும் தினமும் தமிழக அரசுக்கும் தெரியும்.
ஆனால், தமிழகத்தில் அத்தனை உயர் அதிகாரிகள் பதவியையும், அரசியல் பதவியாக்கி வைத்திருக்கிறது திமுக அரசு. ஒரு சில காவல்துறை உயர் அதிகாரிகள், திமுக வட்டச் செயலாளர்களைப் போல பேசுவதையும் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், அடுத்த காவல்துறை டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் 6 பேர் இருக்க, பொறுப்பு டிஜிபி நியமனம் மூலம், அவர்கள் பதவி உயர்வைத் தட்டிப் பறித்திருப்பதோடு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் புறக்கணித்திருக்கிறது திமுக.
காவல்துறை அதிகாரிகளை, தங்கள் அரசியலுக்குப் பலிகடாவாக்கும் திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை, வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்கள் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது என்பதையும், நினைவுபடுத்திக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.