வலுவிழந்த டிட்வா புயல் சின்னம் அடுத்த 2 நாள்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலைகொள்ளும் என்று சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக - புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் நிலவி வருகிறது.
தற்போது சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 50 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நிலை கொண்டிருக்கும் டிட்வா காரணமாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. தரைக்காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது.
சென்னையை நெருங்குவதற்கு முன்னதாகவே டிட்வா புயல் வலுவிழந்ததால் நேற்று சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட பலத்த மழை எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலைமுதல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் மழையின் தீவிரத்தன்மை அதிகரித்து வருகின்றது.
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் வெளியிட்டிருக்கும் கணிப்பில் தெரிவித்திருப்பதாவது:
“சென்னை எதிர்பார்த்த மழை அடுத்த 2 நாள்களில் வலுவிழந்த டிட்வா புயல் கொடுக்கும். புதன்கிழமை வரை காற்றழுத்தப் பகுதியாக சென்னை கடற்கரை அருகே நிலை கொள்ளும்.
எண்ணூரில் மட்டும் கடந்த இரண்டு நாள்களில் 100 மிமீ மழை பதிவாகியுள்ளது. நாளை பல இடங்களில் 100 மிமீ மழையை கடக்கும். இரண்டு நேரங்களில் மழையின் தீவிரத்தன்மை சில சமயங்களில் அதிகரிக்கக் கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், நீலகிரி, கோவை, ஈரோடு, டெல்டா, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.