

சென்னை அருகே புதிதாக திறக்கப்பட்ட பொழுதுபோக்கு பூங்காவான வொண்டர்லாவில், முதல் நாளே ரோலர் கோஸ்டர் பாதி வழியிலேயே நின்றுபோனது. இதனால், பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.
ரோலர் கோஸ்டர் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டு சாதனங்கள் முறையாக இயங்கவில்லை என்று பணம் செலுத்திய பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை அருகே திருப்போரூரில் உள்ள தையூர் பகுதியில் ரூ. 611 கோடி செலவில் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா டிச. 1 ஆம் தேதி திறக்கப்பட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இதனைத் திறந்து வைத்தார்.
உலகத் தரம் வாய்ந்த 43 சவாரிகளுடன் நாள்தோறும் 6500 பார்வையாளர்கள் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த பொழுதுபோக்கு பூங்காவில், முதல் நாளான நேற்று பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர், மோனோ ரயில் போன்ற வசதிகளுடையது என விளம்பரப்படுத்தப்பட்டதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்ற மக்கள் முதல் நாளே ஏமாற்றத்துடன் திரும்பினர்.
முதல் நாளிலேயே ரோலர் கோஸ்டர் பாதி வழியிலேயே நின்றுவிட்டதாக பணம் செலுத்தியவர்கள் விடியோ பதிவிட்டுள்ளனர். இதேபோன்று ராட்சத ஆக்டோபஸ் கரங்கள் உள்ளிட்ட பல சவாரிகளும் பாதி வழியில் அந்தரத்தில் நின்றுள்ளது.
பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பணிகள் முழுமையாக முடியாலமேயே பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்பட்டுள்ளதாக பலர் அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக அங்கு சென்று வந்தவர்கள் பதிவிட்டுள்ள விடியோவில் பலரும் வொண்டர்லா நிர்வாகம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து விடியோ வெளியிட்டுள்ள வொண்டர்லா நிர்வாக இயக்குநர் அருண் சித்திலபிள்ளி, டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட மின் தடையை காரணமாகக் கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, ''முதல் நாளிலேயே சென்னைக்கு கிடைத்த அமோக வரவேற்பிற்கு நன்றி! நேற்று கிட்டத்தட்ட 2,000 பார்வையாளர்கள் வருகைப்புரிந்தனர். புயல் காரணமாக நாங்கள் நிறைய மின்தடைகளை சந்தித்தோம், எங்கள் விருந்தினர்களுக்கு தாமதம் ஏற்பட்டதற்கு மன்னிக்கவும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.