

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவு சரிதான் என தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திற்குப் பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று ராம. ரவிக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் மலை உச்சியில் உள்ள பழமையான தீபத் தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தமிழக அரசு அதனை அமல்படுத்தாததால் நேற்று மாலையே மனுதாரர், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். அந்த விசாரணையில் சிஐஎஸ்எஃப் வீரர்களின் பாதுகாப்போடு மனுதாரர் 10 பேரை அழைத்துக்கொண்டு மலையில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
ஆனால் அப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையிலும் இந்து அமைப்பினர், காவல்துறையின் தடுப்புகளை மீறி மலையேற முயற்சித்ததால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இன்று காலை முதல் இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக நடைபெற்று வந்தது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்து வாதம் செய்தது. மதப் பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் அவர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு குற்றம்சாட்டியது.
வழக்கின் விசாரணையில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
"தனி நீதிபதியின் உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதாலே சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறை தனது கடமையைச் செய்யத் தவறியதால் சிஐஎஸ்எஃப் உள்ளே கொண்டுவரப்பட்டது. இதில் எந்த விதிமீறலும் இருப்பதாகத் தெரியவில்லை. நீதிமன்ற உத்தரவை அரசு செயல்படுத்தியிருக்க வேண்டும்.
மாநில அரசு தனது கடமையைச் செய்யத் தவறியதால்தான் தனி நீதிபதி மீண்டும் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு எதோ நோக்கத்துடன் வழக்குத் தொடர்ந்துள்ளது" என்று நீதிபதிகள் கூறி மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர்.
திமுக இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.