நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்! - திருமாவளவன்

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை...
Justice G.R. Swaminathan should be removed from office: Thirumavalavan
ஜி.ஆர். சுவாமிநாதன் | தொல். திருமாவளவன்
Updated on
2 min read

திருப்பரங்குன்றம் வழக்கில் உத்தரவு பிறப்பித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என க விசிக தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கைக்கு ஏற்ப, மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திற்குப் பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

இதனை கோயில் நிர்வாகம் அமல்படுத்தாததால் சிஐஎஸ்எஃப் வீரர்களின் பாதுகாப்போடு மலையில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிபதி மீண்டும் ஒரு உத்தரவைப் பிறப்பித்தார்.

இதனிடையே, திருப்பரங்குன்றத்தில் கூடியிருந்த இந்து அமைப்பினர் காவல்துறையின் தடுப்புகளை மீறி மலையேற முயற்சித்தித்ததால் மதுரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார். தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த விசாரணையில், தனி நீதிபதியின் உத்தரவால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தனி நீதிபதியின் உத்தரவுக்கு தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்படாமல் தடுத்து அமைதியை நிலைநாட்டிய தமிழ்நாடு அரசுக்கும், கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் ஆத்திரமூட்டலுக்கு இடம் கொடுக்காமல் மத நல்லிணக்கத்தைக் காப்பாற்றிய திருப்பரங்குன்றம் பொதுமக்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகப் பயங்கரவாதிகள் தொடர்ந்து வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தை விட்டு விட்டு, வரலாற்று ஆதாரங்களுக்கு மாறாக வேறு ஒரு இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்தார்கள். அவர்களது ஆத்திரமூட்டலுக்கு இடம் கொடுக்காமல் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றி சுமூகமான முறையில் தீபத் திருவிழாவை தமிழ்நாடு அரசு நடத்தியது.

இந்நிலையில் அங்கு ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு வெளியூர்களில் இருந்து வந்த சனாதனப் பயங்கரவாதக் கும்பல் அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிக் காயப்படுத்தியதோடு பொதுச் சொத்துகளையும் நாசப்படுத்தியது. கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை யுஏபிஏ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

திருப்பரங்குன்றத்துக்கு வெளியூர்களிலிருந்து வந்து கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி அமைதியாக நடந்து முடிந்த நிலையில் அங்கு வன்முறையைத் தூண்டும் விதமாக தீபம் ஏற்றுவதற்குப் பயங்கரவாதிகளை அனுமதித்தது மட்டுமின்றி அவர்களுக்குத் துணையாக உயர் நீதிமன்றப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சிஐஎஸ்எஃப் வீரர்களை அனுப்பியுள்ளார். இது அப்பட்டமான அதிகார மீறல் மட்டுமின்றி அரசமைப்புச் சட்டத்துக்கும், வழிபாட்டுத் தலங்கள் ( சிறப்பு விதிகள் ) சட்டம் 1991 க்கும் எதிரானதாகும்.

இப்படி சட்டத்துக்கு எதிராக செயல்பட்டதோடு, நேற்று முழுவதும் மதுரை, திருப்பரங்குன்றம் பகுதிகளில் தேவையில்லாத சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க முயற்சித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். திருப்பரங்குன்றம் பிரச்சினையில் மட்டுமல்லாது பல்வேறு பிரச்சனைகளிலும் பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாகத் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தும் ஜி.ஆர்.சுவாமிநாதனை நீதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்கு இம்பீச்மெண்ட் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Justice G.R. Swaminathan should be removed from office: Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com