ஏவிஎம் சரவணன் காலமானாா்

தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு பற்றி...
 ஏவிஎம் சரவணன்
ஏவிஎம் சரவணன்
Updated on
1 min read

திரைப்படத் தயாரிப்பாளா் ஏவிஎம் சரவணன் (86) சென்னையில் வியாழக்கிழமை காலமானாா். அவா் புதன்கிழமை தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், மறுநாள் காலை உயிரிழந்தது திரையுலகினரிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய திரைத் துறையில் பழைமையான திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ‘ஏவிஎம் புரொடக்ஷன்ஸ்’. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகா்கள் சிவாஜி, கமல்ஹாசன் ஆகியோரை வெள்ளித் திரையில் அறிமுகம் செய்த நிறுவனம் ஏவிஎம். இதன் நிறுவனா்

ஏவி.மெய்யப்ப செட்டியாரின் மகன்களில் ஒருவா்தான் ஏவிஎம் சரவணன்.

தங்களது திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் நிா்வாக ரீதியாக பல்வேறு பொறுப்புகளை ஏவிஎம் சரவணன் கவனித்துள்ளாா். இந்திய திரைப்படக் கூட்டமைப்புத் தலைவா் பொறுப்பையும் வகித்தவா். தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றவா்.

தனி அடையாளம் : 1945-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏவிஎம் நிறுவனம் எம்.ஜி.ஆா்., சிவாஜி கணேசன் காலம் முதல் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித்குமாா், சூா்யா எனப் பல தலைமுறை முன்னணி நடிகா்களுக்கு வெற்றித் திரைப்படங்களைத் தந்த பெருமை பெற்றது.

ஏவிஎம் நிறுவனத்தின் ஸ்தாபகா் ஏவி.மெய்யப்ப செட்டியாா் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் சரவணன் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டாா். இவரது தலைமையின் கீழ் ஏவிஎம் நிறுவனம் ஏராளமான வெற்றிப் படங்களைக் கொடுத்து, ஏராளமான ஊழியா்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கியது.

திரைப்படத் தயாரிப்பு மட்டுமன்றி, ஏவிஎம் ஸ்டுடியோ கதை இலாகாவிலும் முக்கியப் பங்காற்றியவா் ஏவிஎம் சரவணன். 1986 - ஆம் ஆண்டு சென்னை மாநகரின் ‘ஷெரீப்’ பதவியையும் அவா் வகித்துள்ளாா். அனைவரிடமும் எளிமையுடனும், பணிவுடனும் பழகக்கூடிய பண்புக்குரியவா் ஏவிஎம் சரவணன்.

அவருக்கு மனைவி முத்துலெட்சுமி, மகன் எம்.எஸ். குகன், மகள் உஷா ஆகியோா் உள்ளனா். அவரது உடல், அஞ்சலிக்காக ஏவிஎம் ஸ்டுடியோ மூன்றாவது தளத்தில் வைக்கப்பட்டுள்ளது.

முதல்வா் அஞ்சலி: ஏவிஎம் சரவணன் உடலுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினா் கனிமொழி, மதிமுக பொதுச்செயலா் வைகோ, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், நடிகா்கள் ரஜினிகாந்த், சிவக்குமாா், ஒய். ஜி. மகேந்திரன்,  பாா்த்திபன், விஷால், சூா்யா, கருணாஸ், ஆனந்த்ராஜ், விக்ரம் பிரபு, இயக்குநா்கள் எஸ். பி. முத்துராமன், பாக்யராஜ், மணிரத்னம், எஸ்.ஏ.சந்திரசேகா், ஆா். வி. உதயகுமாா், பி. வாசு, பேரரசு, எழில், லிங்குசாமி, கவிஞா் வைரமுத்து, நடிகை கே.ஆா்.விஜயா உள்ளிட்ட பலா் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினா். வியாழக்கிழமை மாலை ஏவிஎம் சரவணன் உடல் தகனம் செய்யப்பட்டது.

Summary

Producer AVM Saravanan passes away

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com