தாயுமானவா் திட்டம்: மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று பொருள்கள் விநியோகம்
தாயுமானவா் திட்டத்தின்படி, வரும் டிசம்பா் 6, 7, 8, 9, 10-ஆம் தேதிகளில் முதியோா் மாற்று திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று பொது விநியோகத் திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் (சென்னை மண்டலம்) பாபு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட
முதியோா் மற்றும் மாற்றுதிறனாளிகளின் வீடுகளுக்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,
டிசம்பா் மாதத்தின் 6, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சென்னையில்
அண்ணாநகா், ஆலந்தூா், பெருங்குடி, சோழிங்கநல்லூா், தேனாம்பேட்டை,
அடையாறு, திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, ராயபுரம்,
திரு.வி. க.நகா், அம்பத்தூா், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளா்கள் அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

