

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற முயற்சித்தபோது புதன்கிழமை ஏற்பட்ட தள்ளுமுள்ளு தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் இந்து அமைப்பினர் 13 பேரைக் கைது செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குப் பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று ராம. ரவிக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில், மலை உச்சியில் தீபத்தை ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் புதன்கிழமை மாலை மகா தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதன்படி, அந்தத் தூணில் மகா தீபம் ஏற்றுவதற்கான முன்னேற்பாடுகள் புதன்கிழமை பிற்பகலில் நடைபெற்றன. தீபம் ஏற்றுவதற்குத் தேவையான மண் பானை, நெய், திரி, சூடம் போன்றவை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன.
ஆனால், மாலை 4 மணி அளவில் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட தீபம் ஏற்றும் பொருள்கள் அனைத்தும் கீழே இறக்கப்பட்டன.
மாலை 6.05 மணி அளவில் மலை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் மட்டும் கோயில் நிர்வாகம் சார்பில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து, இந்து அமைப்பினர் மலைப் பாதை அருகே திரண்டு, போலீஸார் அமைத்திருந்த தடுப்புகளை கீழே தள்ளிவிட்டு, மலை மீது ஏற முயன்றனர். அப்போது, அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், இரு காவலர்கள், பாஜக மாவட்டத் தலைவர் சிவலிங்கம், நிர்வாகி ராக்கப்பன் ஆகியோர் காயமடைந்தனர்.
இந்த தள்ளுமுள்ளு தொடர்பாக இந்து அமைப்புகளைச் சேர்ந்த 15 பேர் மீது 7 பிரிவுகளில் மதுரை காவல்துறையினர் வழக்குப் பதிந்து 13 பேரைக் கைது செய்துள்ளனர்.
144 தடை உத்தரவு
பொதுமக்களின் பாதுகாப்பு, பொது அமைதியை கருத்தில் கொண்டு, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன்குமார் தெரிவித்தார்.
இதனிடையே, மலை உச்சியில் தீபம் ஏற்றப்படாதது குறித்து இந்து அமைப்பை சேர்ந்த ராம. ரவிக்குமார் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் நேற்று மாலை மீண்டும் முறையிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவுப்படி, ராம. ரவிக்குமார் உள்ளிட்டோர் திருப்பரங்குன்றம் மலை அடிவாரம் பகுதிக்கு புதன்கிழமை இரவு வந்தனர். பிறகு, சிஐஎஸ்எப் வீரர்கள் 67 பேர் பாதுகாப்புப் பணிக்கு வந்தனர். இதையடுத்து, ராம. ரவிக்குமார் உள்ளிட்டோர் நீதிமன்ற உத்தரவுப்படி சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்புடன் மலை உச்சிக்குச் சென்று தீபம் ஏற்ற தங்களை அனுமதிக்க வேண்டும் என போலீஸாரிடம் கோரினர்.
அப்போது, மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால், திருப்பரங்குன்றம் மலையில் ஏற அனுமதிக்க முடியாது என மாநகரக் காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் தெரிவித்தார். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்தப் பேச்சுவார்த்தை நீடித்தது. இருப்பினும், இதில் தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து, இரவு 9.15 மணி அளவில் இந்து அமைப்பினர் அங்கிருந்து புறப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.