

சென்னையில் இருந்து இயக்கப்படும் அனைத்து இண்டிகோ விமானங்களும் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, இண்டிகோ விமானப் பயணிகளை சென்னை விமான நிலையத்துக்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம் என்று மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கு இண்டிகோ நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.
விமானப் பணியாளா்களுக்கு குறிப்பாக, விமானிகளுக்குத் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள புதிய, கடுமையான ‘விமானப் பணிநேரம் மற்றும் ஓய்வு விதிகளை’ (எஃப்டிடிஎல்) பின்பற்றுவதற்கு ஏற்ற போதிய எண்ணிக்கையில் விமானிகள் இண்டிகோவிடம் இல்லை.
இதனால் இண்டிகோ விமானச் சேவை கடந்த சில நாள்களாக பாதிக்கப்பட்டுள்ளது. தில்லியில் 95 விமானங்கள், மும்பையில் 85 விமானங்கள், ஹைதராபாதில் 70 விமானங்கள், பெங்களூருவில் 50 விமானங்கள் வியாழக்கிழமை ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டன.
இதேபோல், தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான இண்டிகோ விமானங்கள் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வருகை தரவேண்டிய மற்றும் புறப்பட வேண்டிய 65 இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, விமான நிலையத்துக்குள் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், இண்டிகோ விமானப் பயணிகளை நிலையத்துக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று அந்நிறுவனம் பாதுகாப்புப் படையிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதனால், விமானப் பயணிகள் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.