

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை ஏன் அமல்படுத்தவில்லை? என அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள பழமையான தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதன் முன்னதாக உத்தரவிட்டிருந்தார். ஆனால் இருமுறை உத்தரவிட்டும் தமிழக அரசு அதனை செயல்படுத்தவில்லை.
இதுதொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று(வெள்ளிக்கிழமை) மீண்டும் நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. நேற்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அரசும் காவல்துறையும் அமல்படுத்தவில்லை என்று மனுதாரர் தரப்பு கூறியது.
அரசுத் தரப்பில், இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், இந்த வழக்கின் மீதான விசாரணையை வரும் டிச. 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன் நீதிமன்றத்தின் உத்தரவை ஏன் செயல்படுத்தவில்லை? சிஐஎஸ்எஃப் வீரர்களை ஏன் உள்ளே அனுமதிக்கவில்லை? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இரு நீதிபதிகள் அமர்வு வழக்கு
தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரின் மேல்முறையீட்டு மனு இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வைத்தது.
அப்போது நீதிபதிகள், "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துகளைப் பகிர வேண்டாம். அதை அனுமதிக்க முடியாது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக டிச. 10 ஆம் தேதி வரை மனுதாக்கல் செய்யலாம். அதன்பின்னர் வரும் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசுத் தரப்பு கோரிக்கையின்படி அனைத்து மனுக்களும் வருகிற டிச. 12 ஆம் தேதி விசாரணை செய்யப்படும்.
மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தின் மாண்பைக் கடைப்பிடிக்கும் வகையில் பொதுவெளியில் பேச வேண்டும். உத்தரவுகள் பிறப்பிக்க கோரி நீதிமன்றத்தை அவசரப்படுத்த வேண்டாம்" என்று கூறினர்.
இந்த வழக்கு பற்றிய விவரங்களுக்கு...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.