

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 7) மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “மதுரைக்கான ஆறு புதிய அறிவிப்புகளை இங்கே அறிவிக்க நான் விரும்புகிறேன்.
முதலாவது அறிவிப்பு
மதுரை மாநகரில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, பல காலமாக எதிர்பார்க்கப்பட்ட வைகை ஆற்றின் வடகரையில், விரகனூர் சுற்றுச்சாலை முதல் சக்குடி வரை 8.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு 130 கோடி ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு
மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளான, மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி இருக்கின்ற நான்கு மாசி வீதிகள், வெளி வீதிகள், புதூர், அண்ணா நகர், சந்தைப்பேட்டை, தெற்குவாசல், எஸ்.எஸ்.காலனி, ஆரப்பாளையம், அரசரடி, பழங்காநத்தம், பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில், இப்போது இருக்கின்ற பழைய பாதாளசாக்கடைக் குழாய்கள் அகற்றப்பட்டு, புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
மூன்றாவது அறிவிப்பு
மதுரை கிழக்கு வட்டத்தில் இருக்கின்ற உத்தங்குடி உபரி நீர்க் கால்வாயில், 7 கோடி ரூபாய் செலவில், தடுப்புச் சுவர் கட்டப்பட்டு, நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
நான்காவது அறிவிப்பு
மேலூர் வட்டத்தில் இருக்கின்ற, கேசம்பட்டி கிராமம் - பெரிய அருவி நீர்த்தேக்கம் மற்றும் அதைச் சார்ந்த கண்மாய்கள் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். மேலும், மேலூர் வட்டம், சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே 9 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு
மதுரை மேற்கு வட்டத்தில் இருக்கின்ற கொடிமங்கலம், மேலமாத்தூர், புதுக்குளம் மற்றும் விளாச்சேரி கிராமங்களில் இருக்கின்ற பல்வேறு ஏரிகள் மற்றும் கால்வாய்கள் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
ஆறாவது அறிவிப்பு
வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் ஒன்றியத்தில், சாத்தையாறு அணை முதல் வைகாசிப்பட்டி வரை இருக்கக்கூடிய சாலை, குடுவார்பட்டி முதல் சல்வார்பட்டி வரை இருக்கக்கூடிய சாலை மற்றும் பாலமேடு முதல் வேம்பரலை வரை இருக்கக்கூடிய சாலை ஆகியவை 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் வனத்துறையின் அனுமதி பெற்று அவைகள் மேம்படுத்தப்படும்.
இந்த அறிவிப்புகளை எல்லாம் நான் வெறும் அறிவிப்புகளாக அறிவித்துவிட்டுப் போகிறேன் என்று நினைக்காதீர்கள். இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.