

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லையில் அவர் அளித்த பேட்டியில், மாவட்ட அளவில் நடைபெறும் இந்த சிலம்ப போட்டியை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்வில் இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிலம்பாட்டம், தற்காப்பு கலை, சுருள்வாள் வீச்சு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. உயர்கல்வி நிறுவனங்களில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என சொல்வதற்கு யு.ஜி.சி.க்கு அதிகாரம் கிடையாது.
பல்கலைக்கழகங்களுக்கு ஆலோசனை மட்டுமே யு.ஜி.சி வழங்க முடியும். அதனை ஏற்பதும், ஏற்காமல் இருப்பதும் மாநில அரசின் உரிமை. மாநிலத்தால் இயங்கும் பல்கலைக்கழகத்தின் முழு உரிமை. யு.ஜி.சிக்கு உத்தரவிடும் அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்றம் தெளிவாக சொல்லிவிட்டது. பல்கலைக்கழகத்திற்கு மானியம் கொடுப்பதுதான் அவர்களது பணி. ஆனால் அதனை விட்டு மீதி பணிகளை யு.ஜி.சி. செய்கிறது. மத்திய அரசின் ஏவலர்களாக சி.பி.ஐ., வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை இருந்த நிலையில் இப்போது தேர்தல் ஆணையமும், யு.ஜி.சி.யும் வந்து விட்டது.
புனிதமாக உள்ள நீதிமன்றத்தையும் மத்திய அரசினர் கேவலமாக மாற்றி விடுவார்கள் என அச்சம் வந்துவிட்டது. பா.ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், சட்டப்பேரவைக் குழு தலைவர் நயினார் நாகேந்திரனின் ஒரு முகம் மட்டும் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்னொரு முகம் அவரிடம் இருப்பதை நேற்று திருப்பரங்குன்றம் விவகாரத்தில் காட்டியுள்ளார். அதனை நயினார் நாகேந்திரன் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை, மெட்ரோ ரயில் தேவை.
அதை சொல்வதை விட்டுவிட்டு நயினார் நாகேந்திரன் மதுரையை கலவர பூமியாக மாற்ற வேண்டும் என்று சொன்னால் என்ன நியாயம் உள்ளது. அமைதியாக உள்ள இடத்தில்தான் கலவரம் செய்ய முடியும். 50 பேருக்கு பயிற்சி கொடுத்து விட்டு சதி செயலில் ஈடுபட்டுள்ளார்கள். அறுபடை வீட்டில் ஒரு இடத்தில் மட்டும்தான் சிக்கந்தர் தர்கா உள்ளது. மற்ற இடத்தில் இது போன்ற எந்த விவகாரமும் இல்லை. சிக்கந்தர் தர்கா இருப்பதால் சண்டையை உருவாக்க நினைப்பதால் அமைதியாக இருக்கும் தமிழகத்தில் கலவர பூமியாக மாற்ற நினைத்தால் அது நடக்காது.
சட்டத்தின் ஆட்சி முதல்வரால் நடத்தி வரப்படுகிறது. எந்த சலசலப்புக்கும் தமிழக அரசு அஞ்சாது. இந்தியாவின் வழிகாட்டி தமிழகம் தான். இந்த ஆட்சி தொடரும். திராவிட ஆட்சியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. பெரியார் அண்ணா, கலைஞர், தற்போதைய முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் என வழி வழியாக ஆட்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.