

பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக போற்றப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை அதிகாலையில் விமரிசையாக நடைபெற்றது.
வரலாற்றுப் பெருமையும்,புராணச் சிறப்பும் உடையது காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயில். பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாகவும் போற்றப்படும் இக்கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணிகள் ரூ.29 கோடி மதிப்பில் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 28.6.2023 ஆம் தேதி பாலாலயம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் டிச.8 திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறும் என அறநிலையத் துறை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்தக்குளம் அருகே 170 சிவாச்சாரியார்கள்,170 வேத விற்பன்னர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து யாகசாலை பூஜைகளை செய்யும் வகையில் பிரம்மாண்டமான நவகுண்ட யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டது.
யாகசாலை பூஜைகள் இம்மாதம் 4 ஆம் தேதி அனுக்கை விக்னேசுவர பூஜையுடன் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக டிச.5,6,7 ஆகிய தேதிகளில் விசேஷ சந்தி யாகபூஜைகளும் நடைபெற்றன. யாகசாலை பூஜைகளை கோயில் ஸ்தானீகர்கள், ஸ்தலத்தார்கள் நடத்தினார்கள். 30க்கும் மேற்பட்ட ஓதுவா மூர்த்திகள் பக்க இசைக்கலைஞர்களுடன் திருமுறைப்பாராயணமும் பாடினார்கள்.
திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு யாகசாலையிலிருந்து புனித நீர்க்குடங்கள் கோபுரங்களுக்கு ஏராளமான சிவ வாத்தியங்கள், மங்கல மேள வாத்தியங்கள் இசைக்க எடுத்துச் செல்லப்பட்டு காலை 6.10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின் போது மூலவர் கோபுரத்தின் மீது காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இளைய பீடாதிபதி சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுவின் தலைவர் எம்.வி.எம்.வேல்மோகன் தலைமையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், இணை ஆணையர் சி.குமரதுரை, கோயில் செயல் அலுவலர் ப.முத்துலட்சுமி ஆகியோர் தலைமையில் விழாக் குழுவினரும் கோயில் பணியாளர்களும் செய்திருந்தனர். ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி கும்பாபிஷேகத்தை நேர்முக வர்ணனை செய்தார்.
விழாவில் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத சுவாமிகள், தர்மபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி தீப்தி அறிவுமதி, திருப்பணிச் செம்மல் மகாலட்சுமி சுப்பிரமணியம், காஞ்சிபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மோகனாம்பாள், தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சுஜாதா , காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன், ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர்கள் மணிகண்டன், பாலமுருகன் உள்பட பலரும் கலந்து கொண்டனர், காஞ்சிபுரம் எஸ்பி கே. சண்முகம் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கும்பாபிஷேகத்தை ஒட்டி ஆலயம் முழுவதும் வண்ண மின்விளக்குகளாலும் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
காஞ்சிபுரம் நகரில் பல்வேறு இடங்களில் வணிக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் அன்னதானமும் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.