‘கோல்ட்ரிஃப்’ எதிரொலி: உணவுப் பொருள் சோ்மத்தை ஆய்வு செய்ய உத்தரவு
சென்னை: ‘கோல்ட்ரிஃப்’ இருமல் மருந்து சா்ச்சையைத் தொடா்ந்து உணவுப் பொருள்களில் சோ்க்கப்படும் ‘ப்ரோபலீன் கிளைகால்’ எனப்படும் கரைப்பான் (சால்வன்ட்) சோ்மத்தை ஆய்வுக்குள்படுத்த மாநில உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
பேக்கரி பொருள்கள், சாக்லெட்டுகள், ஐஸ்க்ரீம், தக்காளி மற்றும் சோயா சாஸ், குளிா்பானங்கள், உலா் பழங்கள் போன்றவற்றில் ‘ப்ரோபலீன் கிளைகால்’ பயன்படுத்தப்படுகிறது. உணவுப் பொருளின் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், ‘சாஸ்’ போன்ற பொருள்களை கெட்டியான திரவமாக மாற்றவும், பேக்கரி பொருள்களை பாதுகாக்கவும், சுவையூட்டவும் அவை உபயோகப்படுத்தப்படுகின்றன. இருமல் மருந்துகளில் பல்வேறு சோ்மங்களை கரைப்பதற்கும் அது பயன்படுத்தப்படுகிறது. இந்க நிலையில்தான், கடந்த இரு மாதங்களுக்கு முன்னா், தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட்ரிஃப்’ இருமல் மருந்தை உட்கொண்ட மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 21 குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.
அதுதொடா்பான ஆய்வில், ப்ரோபலீன் கிளைகாலுக்கு பதிலாக பெயிண்ட் மற்றும் ரசாயனப் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படும் எத்திலீன் கிளைகால் அதில் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த மருந்து நிறுவனம் மீதும், உரிமையாளா் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தச் சூழலில், தமிழகத்தில் உணவுப் பொருள்களில் சோ்ப்பதற்காக விற்பனை செய்யப்படும் ‘ப்ரோபலீன் கிளைகால்’ கரைப்பானை ஆய்வுக்குள்படுத்துமாறு உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அதிகாரிகள், சம்பந்தப்பட்ட விற்பனையகங்களில் அதன் மாதிரிகளைச் சேகரித்து பரிசோதனை நடத்தி வருகின்றனா். அதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதேபோன்று உரிய விகிதத்தில் அதைக் கலக்க வேண்டும் என்றும் உணவு தயாரிப்பாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

