தண்டனைக் குறைப்பு, முன்கூட்டியே விடுதலை கோரி நிலுவையிலுள்ள விண்ணப்பங்கள் எத்தனை?: தமிழக, புதுச்சேரி அரசுகளுக்கு உத்தரவு!
தண்டனைக் குறைப்பு, முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி கைதிகள் அளித்த எத்தனை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன என்பது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் உள்ள கைதிகளுக்கு தண்டனைக் குறைப்பு, முன்கூட்டியே விடுதலை செய்வது தொடா்பாக மாநில அரசுகள் கொள்கை முடிவு எடுக்கும். இதைக் கண்காணிக்க ஒவ்வொரு மாநில உயா்நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினா் செயலா்களை தாமாக முன்வந்து எதிா்மனுதாரா்களாக சோ்த்தனா்.
பின்னா், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எத்தனை தண்டனைக் கைதிகள் இதுவரை முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனா்? முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி கைதிகள் வழங்கிய எத்தனை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன? முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய எத்தனை கைதிகளின் விண்ணப்பங்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினா்.
பின்னா், இதுதொடா்பாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை டிச. 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

