

தமிழ்நாட்டில் 100 சதவிகித எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 9 மாநிலங்களிலும், புதுச்சேரி, அந்தமான் நிகோபார் உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களிலும் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த 4-ஆம் தேதி முதல் தொடங்கி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இன்றுடன் நிறைவடந்த நிலையில், எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிச. 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6.41 கோடி (6,41,14,587) வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட 6,40,84,624 கணக்கீட்டுப் படிவங்களில் நேற்றுவரை 6,38,25,877 (99.55%) படிவங்கள் பதிவேற்றப்பட்டன.
இந்த நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்றைய (டிச.11) மாலை நிலவரப்படி, தமிழகத்தில் 100 சதவீதம், லட்சத்தீவில் 100 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 100 சதவீதம், அந்தமான் நிகோபரில் 100 சதவீதம், சத்தீஸ்கரில் 100 சதவீதம், புதுச்சேரியில் 100 சதவீதம், குஜராத்தில் 100 சதவீதம், கோவாவில் 100 சதவீதம், மேற்கு வங்கத்தில் 100 சதவீதம், ராஜஸ்தான் 99.6 சதவீதம், உத்தரப் பிரதேசத்தில் 99.9 சதவீதம், கேரளத்தில் 99.8 சதவீதம் கணக்கீட்டுப் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்படுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில், புதன்கிழமை வரை 6,41,13,772 பேருக்கு படிவங்கள் விநியோகிக்கப்பட்டு, 6,41,13,221 பேருக்கான படிவங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.
இதற்காக, 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவர்களும், 2,46,069 வாக்குச் சாவடி முகவர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விநியோகிக்கப்பட்டதில் 100 சதவீத படிவங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில் வெறும் 815 பேருக்கு மட்டுமே படிவங்கள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.