

பாரதியார் இருந்திருந்தால் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் என்று பாஜக நிர்வாகி தமிழிசை செளந்தரராஜன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
மாகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியாரின் நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு தமிழிசை செளந்தரராஜன் மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தர்ராஜனிடம், நாடாளுமன்றத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை நீக்க எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம் மக்களவைத் தலைவரிடம் கொடுக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர்,
“அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்க வேண்டும். நீதித்துறை என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு தூண். நீதிபதியைப் பதவி நீக்கம் செய்ய கையெழுத்துப் போட்டு இருக்கிறார்கள் என்றால் இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான செயல். அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு அநீதி விளைக்கிறார்கள். ஏனென்றால் இவர்களுக்கு தேவையான தீர்ப்பு வர வேண்டும், எதிரான தீர்ப்பு வந்தால் நாங்கள் நீதிபதியையே நீக்குவோம் என்ற ஒரு தவறான முன்னுதாரணத்தை திமுக முன்னெடுத்துச் செல்கிறது. அவர்கள் ஒவ்வொருவரும் ஓட்டுக் கேட்க செல்லும் போது அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மக்களைக் கேள்வி கேட்க வைப்போம்.
ஹிந்து மத உணர்வுக்கு எதிராக கையெழுத்து போட்டு இருக்கிறீர்களே, எப்படி ஓட்டு கேட்க வருகிறீர்கள் என்று கேள்வி கேட்க வைப்போம். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கேள்விக்குப் பதில் சொல்லியாக வேண்டும். ஒரு நீதிபதி கருத்து சொல்லி இருக்கிறார், ஒரு தீர்ப்பு சொல்லி இருக்கிறார் என்றால் அதனை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
அவர் என்ன திமுக கொள்கையை பேச முடியுமா?, நீதித்துறையின் கொள்கையைத் தான் அவர் பேச முடியும். நீதித்துறையவே அவமதிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் போக்கை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கையெழுத்து போட்டவர்கள் ஹிந்து மத நம்பிக்கையோடு இருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்” என்று கூறினார்.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன், “நீதிமன்றங்கள் சநாதனிகள் மற்றும் உயர்சாதியினர் கைகளில் இருக்கிறது” என்று பேசிய கருத்துக்கு பதிலளித்த தமிழிசை செளந்தரராஜன்,
”உங்கள் கொள்கையைதான் நீதிபதிகள் பேச வேண்டும் என்பது தவறு. பெரியார் கொள்கையைதான் நீதிபதிகள் பேச வேண்டுமா?. பெரியார் கொள்கைபடி தீர்ப்பு கொடுத்தால்தான் நாங்கள் மதிப்போம், வேறு தீர்ப்பு கொடுத்தால் மதிக்க மாட்டோம் என்று கூறுகிறார்கள். நீதிமன்றத்தையே மிரட்டுவதற்கு சமமாக இருக்கக்கூடிய இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.” என்று கூறினார்.
சுவாமிநாதன் விசாரிக்கும் வழக்குகளை அவரிடம் இருந்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரும்பப் பெற வேண்டும் என்ற அரி பரந்தாமன் கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய தமிழிசை,
”துணைவேந்தர்களாக இவர்கள் கட்சியில் உள்ள செயலாளர்களையே நியமித்துக் கொள்ள வேண்டும், நீதிபதிகளையும் இவர்களே நியமித்துக் கொள்ள வேண்டும் என்று இருக்கின்ற திமுக நடுநிலையாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
நீதிபதி சுவாமிநாதனை தனிப்பட்ட முறையில் தாக்குவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவரது சாதியைப் பற்றி தாக்குதல் நடத்துவதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இன்று பாரதியார் பிறந்தநாளில் சாதியை யாரும் பார்க்கவில்லை. ஆனால், இவர்கள் சாதியைப் பார்க்கிறார்கள்.” என்று பேசினார்.
முன்னதாக கொடுத்த பேட்டியில் தமிழிசை பேசியதாவது:
”பாரதியாருக்கு வணக்கம் சொல்லும் அதே நேரத்தில் பாரத பிரதமருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வந்தே மாதரம் 150-வது ஆண்டை பற்றிய நாடாளுமன்ற விவாதத்தில் பாரதியாரையும், வ.உ.சி.யை நினைவு கூர்ந்ததும் தமிழகத்தை சேர்ந்த நாம் எல்லோரும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்ள வேண்டும்.
பாரதியார் இன்று இருந்திருந்தால் பிரதமருக்கு ஒரு வாழ்த்து பாடல் பாடியிருப்பார். ஏனெனில் தேசியத்தையும் தெய்வீகத்தையும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் திருச்சி சிவா போன்றவர்கள் திமுக அறிவாலயத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு தேசியக் கொடியைக் கூட ஏற்றியது கிடையாது. ஆனால் இன்று தேசப்பற்றை பேசிக் கொண்டிருக்கிறார்கள். தனி தமிழ்நாடு வேண்டும், சுதந்திரம் வேண்டாம் என்று சொன்னவர்கள் இன்று நாடகமாடுகிறார்கள்.
காசியில் தமிழ் இருக்கை உருவாக்கியதாக இருக்கட்டும், மும்பை துறைமுகத்திற்கு ராஜேந்திர சோழன் பெயர் சூட்டியதாக இருக்கட்டும், திருக்குறளை எல்லா மொழிகளிலும் மொழிப்பெயர்த்ததாக இருக்கட்டும், தமிழுக்கு பிரதமர் மிகப் பெரிய மரியாதையை செலுத்திக் கொண்டிருக்கிறார்.
இன்றுவரை பாரதியாருக்கு திமுக அரசு விழா எடுக்கவில்லை. 2026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு பாரதியாருக்கு மிக பிரம்மாண்டமான அரசு விழா பிரதமர் மோடியை வரவழைத்து நடைபெறும். அதற்காக வேண்டுகோள் வைப்போம்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.