

தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"தமிழகத்தில் 10% வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 68,467 ஆக இருந்த நிலையில் 75,035 ஆக அதிகரித்துள்ளது. அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்காமல் வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் ஆணையம் உயர்த்தியது ஏன்? தேர்தல் ஆணையம் அறிக்கைக்கு ஏற்ப சட்டத்துறை நடவடிக்கை மேற்கொள்ளும்.
திமுகவின் கடுமையான முயற்சியால் வாக்காளர் பட்டியலில் பெரும்பாலானோர் சேர்க்கப்பட்டுள்ளனர். கட்சி பேதமின்றி எஸ்ஐஆர் பணிகளுக்கு திமுகவினர் உதவியிருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் வருகிற டிச. 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. சுமார் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். எந்த அளவுக்கு உண்மை என்பது பட்டியல் வெளியீட்டிற்குப் பிறகே தெரியும். தகுதியான வாக்காளர்களை மீண்டும் சேர்க்கும் பணியில் ஈடுபடுவோம்.
எஸ்ஐஆர் பணிகளின் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் வலுவாக எதிர்த்தது திமுக மட்டும்தான்.
மக்களவைத் தேர்தலின்போது அமித் ஷா 8 முறை தமிழ்நாட்டுக்கு வந்தார். ஆனால் திமுக வெற்றி 39ல் இருந்து 40 ஆக அதிகரித்ததே தவிர குறையவில்லை. அமித் ஷா தமிழ்நாட்டு வந்தால்தான், ஆளுநராக ஆர்.என்.ரவி இருந்தால்தான் திமுகவுக்கு அதிக வெற்றி கிடைக்கும்" என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.