

அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என இளைஞரணி தொண்டர்களிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச., 14) கேட்டுக்கொண்டார்.
இளைஞர்களிடம் அரசியல் உணர்வை கொண்டு செல்ல வேண்டும் எனக் கூறிய அவர், அன்போடு வந்தால் அவரணைப்போம் என்றும் ஆணவத்தோடு வந்தால் அடங்கமாட்டோம் எனவும் பாஜகவை குறிப்பிட்டுப் பேசினார்.
திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு இன்று (டிச., 14) நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், ஆ.ராசா, மு.பெ. சாமிநாதன் உள்பட திமுக மூத்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,
''கட்சிக்கு எது தேவை என்பதை உணர்ந்து செயல்படுகிறார் உதயநிதி. லட்சக்கணக்கான இளைஞர்களை கட்சியில் சேர்த்தார். அவரை கொள்கை ரீதியாக வலுவாக்க பாசறை கூட்டங்களை நடத்தினார்.
தற்போதைய தலைமுறையினரைக் கவரும் வகையில் இளம் பேச்சாளர்களை உருவாக்கினார். அவர்கள் பேச்சு பலரை உண்மையின் பக்கம் திருப்புகிறது.
தொண்டர்களிடையே திராவிட கருத்துகளை வலுவாக்க வேண்டும், மேம்படுத்த வேண்டும் என கருணாநிதி பெயரில் படிப்பகம் தொடங்கினார்.
இவை உங்களை வந்து சேர வேண்டும் என அறிவுத் திருவிழா நடத்துகிறார். தமிழ்நாட்டை உயர்த்தக்கூடிய திமுகவின் பாதையில் மக்களைக் கொண்டுவர வேண்டும். உதயநிதி ஆபத்தானவர் என கொள்கை எதிரிகள் புலம்பும் அளவுக்கு அவர் செயல்படுகிறார்.
தமிழ்நாட்டை வெல்ல முடியாது
பாஜக அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த ஆணவத்தில் ஆக்ரோஷமாக செயல்படுகிறது. தமிழ்நாட்டையும் தமிழையும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் இறையாண்மையை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.
பிகாரை தொடர்ந்து அடுத்த இலக்கு தமிழ்நாடுதான் என்கிறார் அமித் ஷா. தமிழ்நாட்டில் அவர்களால் வெற்றி பெற முடியாது. அன்போடு வந்தால் அரவணைப்போம். ஆணவத்தோடு வந்தால் அடிபணிய மாட்டோம். எதிர்த்து நிற்போம். இந்தியாவிலேயே சித்தாந்த ரீதியாக போரிடும் கட்சி திமுக. எங்கள் கேரக்டரையே புரிந்துகொள்ளவில்லையே; உங்களை (பாஜக) நிச்சயம் வென்றுகாட்டுவோம்.
இளைஞரணிக்கு வேண்டுகோள்
உழைப்பு, தியாகம், கொள்கையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என உருவாக்கப்பட்டது இளைஞரணி. ஊர் ஊராகச் சென்று மன்றம் அமைத்து கொள்கைகளை கூர்மையாக்கினோம். இந்தப் பயணத்தில் சந்திக்காத வலிகளே இல்லை.
மக்களை காப்பதே அரசியல், இளைஞர்களிடம் அரசியல் உணர்வை கொண்டு செல்ல வேண்டும். 10 ஆண்டுகாலம் தமிழ்நாட்டை பாதாளத்தில் தள்ளியது அதிமுக. கடந்த கால ஆட்சியாளர்களின் துரோகங்களை நினைவூட்டுங்கள். இது இளைஞரணியினரின் பொறுப்பு.
அரசியலில் சொகுசை எதிர்பார்க்காதீர்கள். கடுமையாக உழைப்பவர்களுக்கே இங்கு இடம் கிடைக்கும். உதயநிதியும் இதையேதான் செய்கிறார். உங்களிடமும் (இளைஞரணி) இதையேதான் எதிர்பார்க்கிறேன். இன்னும் 50 ஆண்டுகள் முன்னோக்கிச் செல்லப்போகிறோமா? பின்னோக்கிச் செல்லப்போகிறோமா? என்பதுதான் மக்களுக்கான கேள்வி.
உலகில் வேறு யாரும் செய்யாத திட்டங்களை கொண்டுவந்துள்ளது திமுக. இந்த திட்டங்களால்தான் இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
புத்தகமாக மாற்றும் அளவுக்கு அரசுத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். மத்திய அரசு வெளியிடுகிற புள்ளி விவரங்களில் கூட தமிழ்நாடுதான் முதன்மையில் உள்ளது.''
இதையும் படிக்க | என்ஜின் இல்லாத கார் அதிமுக, கட்டி இழுக்கிறது பாஜக: உதயநிதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.