

தமிழ்நாட்டில் என்ஜின் இல்லாத கார் அதிமுக என்றும் அதனை பாஜக என்ற லாரி கட்டி இழுப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
பழைய அடிமைகளுடன் புதிய அடிமைகளை சேர்த்துக்கொண்டு தமிழ்நாட்டிற்குள் நுழைய பாஜக முயற்சிப்பதாகவும், பாசிசத்திற்கு எப்போதும் தமிழ்நாட்டில் இடமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு இன்று (டிச., 14) நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் உதநிதி ஸ்டாலின் பேசியதாவது,
பிகாரின் வெற்றிக்குப் பிறகு தமிழ்நாடுதான் இலக்கு என்கிறார் அமித் ஷா. அவர்களை எதிர்க்க எங்கள் கருப்பு - சிவப்பு படை என்றுமே தயாராக இருக்கும்.
தில்லியில் ஆதிக்கத்தை எதிக்கத்தான் கருப்பு - சிவப்பு கொடி என்றார் அறிஞர் அண்ணா. முதல்வர் கூறியதைப்போல தமிழ்நாடு என்றுமே தில்லியின் கட்டுப்பாட்டில் இருந்து அவுட் ஆஃப் கன்ட்ரோல்தான்.
மிசா என்னும் நெருப்பாற்றில் நீந்திய இயக்கம். தமிழுக்காக தண்டவாளத்தில் தலை வைத்த இயக்கம். இப்படி பல பெருமைகளை உடைய இயக்கத்தை நீக்கிவிட்டு தமிழகத்தை குஜராத்தில் இருந்து கட்டுப்படுத்திவிடலாம் என்றால் அது நடக்காது.
மற்ற மாநிலங்களில் நுழைந்ததைப் போல தமிழ்நாட்டில் நுழைய முடியாது. திமுக இளைஞரணி இருக்கும் வரை தமிழ்நாட்டில் அது நடக்காது.
மதம் பிடித்த யானை பாஜக என்பது நமக்குத் தெரியும். ஆனால், யானையை அடக்கும் அங்குசம் முதல்வர் கைகளில் உள்ளது.
பழைய அடிமைகளுடன் புதிய அடிமைகளை சேர்த்துக்கொண்டு தமிழ்நாட்டிற்குள் நுழைய முயல்கிறது பாஜக. அவர்களை முன்வைத்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார். ஆனால், நாம் தமிழக மக்களை நம்பி களத்தில் இருக்கிறோம். என்ஜின் இல்லாத கார் தான் அதிமுக. அதனை கட்டி இழுக்கிறது பாஜக என்னும் லாரி.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், முதலில் அவர் அதிமுகவை காப்பாற்ற வேண்டும்.
அடிமையாக இருந்து சுகமாக வாழ்வதை விட, சுயமரியாதையுடன் சுதந்திரமாக வாழ்வதே மேலானது.
திமுகவை சிலர் மிரட்டிப்பார்க்கின்றனர். அடுத்து எங்கள் இலக்கு தமிழ்நாடு என்கிறார்கள். பாசிசத்திற்கு எதிரான போரில் களத்தில் நின்று வெற்றி பெற வேண்டும். அதற்கு இளைஞரணி வலுவை சேர்க்க வேண்டும்.
அடுத்த 100 நாள்கள் களத்தில் இருந்து உழைக்கத் தயார் என நான் உறுதி கூறுகிறேன். முதல்வரிடம் ஒரே ஒரு வேண்டுகோள், நடக்க இருக்கும் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்க வேண்டும். 200 தொகுதிகளில் கட்டாயம் வெல்வோம் என உதயநிதி பேசினார்.
இதையும் படிக்க | ரூ. 20 லட்சம் ரொக்கம், கார் கேட்டதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.