

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் பெயர் மாற்றத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் பெயரை மாற்றி 'கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான வளர் இந்திய உறுதியளிப்புத் திட்டம் (Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) -VB-G RAM G) என்ற பெயரில் மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
"மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் மத்திய பா.ஜ.க. அரசு!
தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்!
100% மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்!
இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழ்நாடு தண்டிக்கப்படவுள்ளது!
வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்குமாம்!
பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது மத்திய பா.ஜ.க. அரசு!
மூன்று வேளாண் திட்டங்கள், சாதிவாரி கணக்கெடுப்பு போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதேபோல மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரைச் சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள்! எனவே, மக்களின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இப்போதே இந்த புதிய பெயரில் உள்ள திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்!" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.