

சென்னை சர்வதேச விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் அமையவுள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(டிச. 16) அடிக்கல் நாட்டுகிறார்.
ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக சென்னை நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று முதல்வர் கடந்த மார்ச் மாதம் நாகையில் கலந்துகொண்ட அரசு விழாவில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதன்படி, ஒரு ஏக்கர் நிலத்தில் ரூ. 39.20 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு முதல்வர் நாளை(டிச.16) காலை அடிக்கல் நாட்டுகிறார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
"முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை நோக்கம் எல்லார்க்கும் எல்லாம் என்பதே ஆகும். அரசு நிறைவேற்றும் திட்டங்கள் அனைத்தும் சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் செயல்படுத்தி வருவது இந்த உண்மையைத் தெளிவுபடுத்தும்.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் வாழும் அனைவரையும் போல் சிறுபான்மையின மக்கள் சம உரிமையுடன் வாழ்வதற்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து வருகிறார்கள். இஸ்லாமிய சமுதாய மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதை அவர்களின் வாழ்நாள் கடமைகளில் முக்கியமானதாகக் கருதுகிறார்கள்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஹஜ் பயணம் மேற்கொள்ள ஆண்டுதோறும் சென்னை வரும் இஸ்லாமியர்கள் பயணம் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகச் சென்னை வந்து தங்கி சென்னை விமான நிலையம் வழியாக ஹஜ் பயணம் செல்வதற்கு வசதியாக விமான நிலையத்திற்கு அருகில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என 2.3.2025 அன்று அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பின்படி சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் நங்கநல்லூரில் ஒரு ஏக்கர் அரசு நிலப்பரப்பில் 39 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றிற்கு ஏறத்தாழ 400 ஹஜ் புனித பயணிகள் தங்குவதற்கு ஏற்ப தமிழ்நாடு ஹஜ் இல்லக் கட்டடம் கட்டுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 16.12.2025 அன்று காலை 10 மணி அளவில் அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சீர்மிகு பெரு மக்கள் கலந்துகொள்கிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.