சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்! - ஜெ.பி. நட்டா
பிரதமர் மோடிக்கு எதிரான முழக்கங்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக எம்.பி. ஜெ.பி. நட்டா வலியுறுத்தியுள்ளார்.
தில்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் வாக்குத் திருட்டுக்கு எதிராக நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், 'பிரதமர் மோடிக்கு கல்லறை தோண்டப்படும், இன்று இல்லையேல் நாளை..' என்று முழக்கமிட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா, பிரதமர் மோடிக்கு எதிரான முழக்கங்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"நேற்று காங்கிரஸ் பேரணியில் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. இதுபோன்ற முழக்கங்கள் காங்கிரஸ் கட்சியின் சிந்தனையையும் மனநிலையையும் காட்டுகிறது. ஒரு பிரதமருக்கு எதிராக இதுபோன்ற விஷயங்களைக் கூறுவது கண்டிக்கத்தக்கது. இதற்காக சோனியா காந்தி இந்த நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மிகவும் கீழ்த்தரமான அரசியலை காங்கிரஸ் செய்து வருகிறது. இது எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை" என்று கூறினார்.
இதுபற்றி காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால் கூறுகையில், "நேற்று தில்லியில் நாங்கள் ஒரு வெற்றிகரமான பேரணியை நடத்தியதால் இன்று பாஜகவினர் உருவாக்கியுள்ள ஆதாரமற்ற நாடகம் இது. எந்தவொரு காங்கிரஸ் தலைவராவது அப்படி ஏதாவது சொன்னாரா? என்று நான் அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் கேட்டேன். பேரணியில் இருந்த சிலர் அப்படிச் சொன்னதாக கூறினார். இது ஆதாரமற்றது. அரசியல் எதிரிகளாக இருந்தாலும் சரி, எந்தவொரு அரசியல் தலைவருக்கும் எதிராக ஏற்றுக்கொள்ள முடியாத முழக்கத்தைப் பயன்படுத்துவது எங்கள் வழக்கம் அல்ல. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசிய பேச்சை நாம் பார்த்தோம். மாநில அளவிலோ அல்லது மாவட்ட அளவிலோ எந்தத் தலைவரும் இதுபோன்ற செயலைச் செய்ய மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
Senior Congress leader Sonia Gandhi should apologise to the nation for slogans against PM Modi: JP Nadda
இதையும் படிக்க | தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்! - பாஜக அறிவிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
