

தங்கம் விலை அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது. நாள்தோறும் நூறுகளில் உயர்ந்த தங்கம் விலை, தற்போது ஆயிரத்தில் உயர்ந்து ஒரே ஆண்டில் இரு மடங்கு உயர்ந்துள்ளது.
தற்போதை சூழலில் தங்கம் விலை குறைவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. சர்வதேச சந்தைக் காரணிகளால் உலக நாடுகள் பலவற்றின் மத்திய வங்கிகள் தங்கத்தின் மீதான முதலீடுகளை அதிகரித்திருப்பதே தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
ரூ. 1 லட்சத்தைக் கடந்த தங்கம்
நிகழாண்டு இறுதிக்குள் தங்கம் விலை சவரனுக்கு ஒரு லட்சம் ரூபாயை தொடும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்தனர், அதை உறுதி செய்யும் விதத்தில், இப்போது தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1 லட்சத்தைக் கடந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதும், சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைக்கு பதிலாக தங்கத்தில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருவதும், தங்கம் விலை அதிவேகமாக உயர வழிவகுத்துள்ளது.
இந்தாண்டு தொடக்கத்தில் தங்கத்தின் விலை, ஒரு சவரன் ரூ. 57,000 ஆக இருந்த நிலையில், மே மாதம் ஒரு சவரன் 70 ஆயிரத்தைக் கடந்தது. படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை, அக்டோபர் 17 ஆம் தேதி வரலாறு காணாத உயர்வைக் கண்டது. ஒரு சவரன் தங்கம் ரூ. 97,000 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டது.
அதன்பிறகு, தங்கத்தின் விலை சற்றே குறையத் தொடங்கிய நிலையில், மக்கள் நிம்மதியடைந்தனர். இந்த நிலையில், இம்மாதம் ஆரம்பம்முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து மீண்டும் உயர்ந்து வருகிறது.
கடந்த டிச. 1-ல் சவரன் ரூ.96,560-க்கு விற்பனையானது. அதன்பின்னர், தங்கம் விலை தொடா்ந்து ஏற்ற, இறக்கத்தில் நிலை பெற்று வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.2,560 உயர்ந்து ரூ.98,960-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், 2025, டிசம்பர் மூன்றாவது வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை(டிச.15) காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்தது. வர்த்தகம் நிறைவடைவதற்கு முன்பாக மீண்டும் சவரனுக்கு ரூ. 440 உயர்ந்ததால், ஒரு சவரன் தங்கம் ரூ. 1,00,120 என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஏழைகளின் எட்டாக்கனியாக மாறிய தங்கம்
கச்சா எண்ணெய் மற்றும் டாலர் ஆகியவை விலை சரியும் அபாயம் ஏற்படும்போது, அதற்கு நேரெதிராக தங்கம் விலை உயர்கிறது.
இந்தியாவில் தங்கம் விலை உயர அரசு கொள்கைகள், அரசியல் பின்னணிகளும் காரணங்களாக மாறுகின்றன. மிகப்பெரிய அரசியல் நிகழ்வு, பொருளாதார மாற்றம் போன்றவை சர்வதேச அளவில் எதிரொலித்து, இவற்றின் காரணமாகவும் தங்கம் விலை உயரலாம் அல்லது குறையலாம்.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை மாறும்போது முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான சொர்க்கமாக தங்கம் இருப்பதால், அதிக முதலீடுகள் நடக்கும்; விலையும் உயர்கிறது.
ஆனால் தங்கத்தின் விலை உயர்வுக்கு உள்ளூர் காரணிகள் மட்டும் காரணமல்ல, சர்வதேச காரணிகளால் மட்டுமே உயர்கிறது. இப்படி உயர்ந்துகொண்டிருக்கும் தங்கம் விலை, எட்டாக்கனியாக மாறியுள்ளது சமூகத்தில் ஏக்கம் கலந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: ரூ. 1 லட்சத்தைக் கடந்த தங்கம் விலை! வரலாறு காணாத உச்சம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.