

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் வக்ஃப் வாரியம் தரப்பு வாதங்கள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் இன்று முன்வைக்கப்பட்டன.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுகளுக்கு எதிராக கோயில் நிா்வாகம், மாவட்ட நிா்வாகம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகின்றன.
கோவில் நிர்வாகம் தரப்பில் நேற்று முன்வைக்கப்பட்ட வாதத்தில், ”திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூண், மக்களிடமிருந்து விலகி மலைகளில் வாழ்ந்த சமணா்கள், இரவில் கலந்துரையாடுவதற்கு அமைத்திருக்கலாம். மதுரையைச் சுற்றியுள்ள நாகமலை, பசுமலை, அழகா்மலை, சித்தா்மலை, சமண மலைகளில் இதுபோன்ற தீபத் தூண்கள் உள்ளன. அங்கு சமணா்கள் அதிகளவில் வாழ்ந்ததற்கான சான்றுகளும் உள்ளன.” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை வக்ஃப் வாரியம் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அப்போது பேசிய வழக்கறிஞர், “மனுதாரர் தொடர்ந்த வழக்கால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூண் யாருக்குச் சொந்தம்?, தூண் இருக்கும் இடம் யாருக்குச் சொந்தம்? என்ற பிரச்னை எழுந்துள்ளது.
தூண் தர்காவின் இடத்தில்தான் உள்ளது. மலை உச்சியில் தர்கா இருப்பதால்தான் சிக்கந்தர் மலை எனக் கூறப்படுகிறது. 1920 ஆம் ஆண்டு உரிமையியல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், தர்கா, செல்லும் படிக்கட்டுகள், நெல்லித்தோப்பு உள்ளிட்ட நிலங்கள் தர்காவுக்குச் சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் தனி நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை.
திருப்பரங்குன்றம் மத நல்லிணக்கத்தின் சின்னமாகும். அது சிதைந்துவிடக் கூடாது. மத்தியஸ்தம் மூலம் ஒரு தீர்வு ஏற்படக்கூடும் என்பதில் நாங்கள் இப்போதும் உறுதியாக இருக்கிறேன். சுமுகமான தீர்வைக் காண்பதற்காக மத்தியஸ்தர்களுடன் அமர்ந்து பேச தயாராக இருக்கிறோம்.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.