விஜய் கூட்டத்துக்கு பாஸ் தேவையில்லை; அனைவரும் வரலாம்! செங்கோட்டையன்

ஈரோட்டில் விஜய் பிரசாரக் கூட்டத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி...
விஜய்
விஜய்
Updated on
1 min read

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்டத்துக்கு வருபவர்களுக்கு பாஸ் கிடையாது, அனைவரும் வரலாம் என்று தவெக நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகே சரளை என்ற இடத்தில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் பிரசார கூட்டம் டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக தமிழகத்தில் பொதுவெளியில் பிரசாரக் கூட்டத்தில் விஜய் பங்கேற்கவுள்ளதால், காவல்துறையினர் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

இந்த கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செங்கோட்டையன் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செங்கோட்டையன் பேசியதாவது:

“ஈரோடு காவல்துறையினர் விதித்த நிபந்தனைகளைவிட அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 40 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 24 ஆம்புலன்ஸ்கள், 72 மருத்துவர்கள், 120 செவிலியர்கள் முழு மருத்துவ உபகரணங்களுடன் பணியமர்த்தப்படுவார்கள்.

20 தண்ணீர் தொட்டிகள் வைக்கப்படும், கூட்டத்துக்கு வரும் அனைவருக்கும் தண்ணீர் பாட்டில் வழங்கப்படும். கழிப்பறை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 60 ஏக்கரில் நான்கு சக்கர, 20 ஏக்கரில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

1,700 காவலர்கள் பாதுகாப்புக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 தீயணைப்பு வாகனத்துக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்துக்கு 14 நுழைவு மற்றும் வெளியேறும் வாயில் அமைக்கப்பட்டுள்ளது. 10,000 தொண்டர்கள், 25,000 மக்கள் விஜய்யைக் காண வரவுள்ளனர். பாஸ், க்யூ-ஆர் கோடு என எதுவும் கிடையாது. அனைத்து ஈரோட்டு மக்களும் விஜய்யைக் காண வரலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

No pass is required for Vijay's meeting: everyone is welcome - Sengottaiyan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com