மேலும் 600 மின்சாரப் பேருந்துகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்! - முதல்வர் அறிவிப்பு

3-வது தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு...
Climate Change: CM stalin speech about TN govts actions
முதல்வர் மு.க. ஸ்டாலின்
Updated on
4 min read

பேரிடர் நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசு ரூ. 24,679 கோடி கேட்ட நிலையில் மத்திய பாஜக அரசு ரூ. 4,136 கோடி மட்டுமே வழங்கியுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (17.12.2025) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற 3-வது தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:

காலநிலை மாற்றத்தின் விளைவுகளை இப்போது கண்கூடாக பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இப்போதுகூட, 'டிட்வா புயல்' எப்படிப்பட்ட கோர தாண்டவத்தை ஆடியது, அதனால் இலங்கை உள்ளிட்ட நாடுகள் எப்படி பாதிக்கப்பட்டது  என்று பார்த்தோம்.

 நம்முடைய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தமிழ்நாட்டை காப்பாற்றியிருக்கிறோம். எப்போதோ ஒருமுறை, புயல் - வெள்ளங்களை எதிர்கொண்ட காலத்தை எல்லாம் நாம் கடந்துவிட்டோம். அதை உணர்ந்துதான் 3 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பேரிடர்களுக்கேற்ற தடுப்பு மற்றும் தகவமைப்பு உட்கட்டமைப்புகளை தொடங்கிவிட்டோம்.

  • காலநிலை மாற்ற ஆட்சிமன்றக் குழு

  • பசுமைத் தமிழ்நாடு இயக்கம்

  • தமிழ்நாடு ஈரநில இயக்கம்

  • தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்

  • தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்று நாம் Advance-ஆக நிறைய செய்து கொண்டிருக்கிறோம். இதனால், இந்தியாவிற்கே வழிகாட்டும் நிலையில் தமிழ்நாடு இருக்கிறது. 

கடந்த கூட்டத்தில்கூட, உறுப்பினர்கள் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தீர்கள். அதை அடிப்படையாக வைத்து, கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காலநிலைக் கல்வியறிவு முன்னெடுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டோம். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் திறமைமிகு 4 ஆயிரம் பள்ளியாசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். மிக விரைவில், காலநிலைக் கல்வியறிவு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது என்கின்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 

அதுமட்டுமல்லாமல், பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுக்கு இரண்டு முறை, மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் மூலமாக, நடத்தப்படும் ஒரு நாள் கோடைக்கால மற்றும் குளிர்கால சிறப்பு முகாம்களை இரண்டு நாள் முகாம்களாக பள்ளிக் கல்வித்துறை மூலமாக நடத்த ஏற்பாடு செய்திருக்கிறோம். 

மேலும், கூல் ரூஃபிங் திட்டத்தை, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் 2025-26-ஆம் ஆண்டிற்கான செயல்திட்டத்தில் சேர்த்திருக்கிறோம். அம்பத்தூரில் இருக்கும் பெருந்தலைவர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வகுப்பறைகளில், கூல் ரூஃபிங் எனப்படும் அதிக வெப்ப பிரதிபலிப்புமிக்க வெள்ளைப் பூச்சுகள் பூசப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக வகுப்பறைகளில் வெப்ப அளவினை கணக்கிடக்கூடிய சென்சார்கள் வைத்து கண்காணித்ததில், அறை வெப்ப நிலை 1.5 டிகிரி முதல் 3 டிகிரி வரை குறைந்திருக்கிறது. இது குறித்த அறிக்கையின் அடிப்படையில், இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் இருக்கும் 297 பசுமைப் பள்ளிகளிலும் செயல்படுத்த இருக்கிறோம். 

அதுமட்டுமல்லாமல், மேற்சொன்ன இயக்கங்கள் மூலமாக, கார்பன் சமநிலை மையங்கள், காலநிலை மீள்திறன்மிகு கிராமங்கள், கடலோரப் பகுதிகளில், உயிர்க் கேடயங்கள் அமைத்தல் போன்ற, முக்கியமான காலநிலை மாற்றத் தடுப்பு மற்றும் தகவமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த அக்டோபர் மாதம் நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கான, கரிம நீக்க வழித்தடங்கள் குறித்த செயல்திட்டமும், தமிழ்நாட்டிற்கான காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு வலைதளமும் வெளியிடப்பட்டிருக்கிறது. 

கடலூர் மாவட்டம், பிச்சாவரம் அருகே கிள்ளையில் காலநிலை மீள்திறன்மிகு கிராம திட்டத்திற்காக பிரத்யேகமான, திட்ட மேலாண்மை அலகுடன் கூடிய அலுவலகத்தையும் தொடங்கி வைத்திருக்கிறோம். மேலும், அங்கு இருக்கும் அரசு அலுவலகங்களில், சூரிய ஒளி மின்னாற்றல் உற்பத்தி, மக்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டிற்கான பயிற்சிகள், வெள்ள அபாயங்கள் ஏற்படாமலிருக்க பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரப்பட்டு சீரமைத்தல், பிச்சாவரம் படகு குழாமிற்கு மின்னாற்றலில் இயங்கக்கூடிய படகு வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அந்த கிராமம் காலநிலை மீள்திறன்மிகு கிராமமாக மாற்றுவதற்கான முதல் படி எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. 

கடலோர வாழ்விடங்களை, இயற்கை சார்ந்த தீர்வுகள் மூலம் மறுசீரமைக்கும் திட்டத்தின்கீழ், தொடர்ச்சியாக அலையாத்தி மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இதன் ரிசல்ட் என்ன தெரியுமா? தமிழ்நாட்டில் 4,500 ஹெக்டேர் பரப்பளவுக்கு இருந்த அலையாத்திக் காடுகள், 9,000 ஹெக்டேராக, அதாவது, இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. இந்தச் சாதனையில் பங்கு வகித்த எல்லோருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய பாராட்டுக்களை நான் தெரிவித்துக்கொள்கிறேன். 

நீர் நிலைகளைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தனி நபர்களையும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் ஊக்குவிக்கிறோம். மாவட்டத்திற்கு ஒருவர் என்று 38 பேருக்கு கடந்த ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் நாளில், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுடன் கூடிய, முதலமைச்சரின் நீர்நிலைப் பாதுகாவலர் விருது வழங்கியிருக்கிறோம்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் மூலம், நிலைத்தகு நடைமுறைகளைப் பின்பற்றும் தொழிற்சாலைகளுக்கு, தன்னார்வ பசுமைத் தரச் சான்றிதழ் வழங்கும் திட்டமானது, தொழிற்சாலைகளால் ஏற்படும் உமிழ்வுகளைக் கட்டுப்படுத்த உதவும் என்று நம்புகிறோம். உலகெங்கும் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களில், அதிகம் பாதிக்கப்படுபவர்களாக பெண்களும், பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள் என்று ஆய்வுகளில் உறுதியாகி இருக்கிறது. 

அதனால், பாலின சமத்துவத்தை உறுதி செய்கின்ற விதத்தில் அரசின் திட்டங்களும், காலநிலை தடுப்பு மற்றும் தகவமைப்பு நடவடிக்கைகளும் இருக்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் உங்களிடம் நான் கோரிக்கை வைக்கிறேன். ஏனென்றால், நம்முடைய திராவிட மாடல் அரசு பெண்களுக்கான அரசாக அனைத்துத் துறைகளிலும் பெயர் பெற்றிருக்கிறது. அது இங்கும் தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் பெண்களின் பங்குதான் அளப்பரியது. அதனால்தான், ‘க்ளைமேட் வாரியர்ஸ்’ என்கிற திட்டத்தின்கீழ் 100 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, காலநிலை மாற்றம் மற்றும் நெகிழி ஒழிப்புப் பரப்புரையையும் மேற்கொள்ள, 100 இ-ஆட்டோக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. 

தமிழ்நாட்டின் மொத்த பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் போக்குவரத்துத் துறையின் பங்கு 12 விழுக்காட்டிலிருந்து 19 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது என்று ஆய்வறிக்கைகளில் தெரிய வந்திருக்கிறது. அதுவும், கடந்த 2005 முதல் 2019-க்கு இடைப்பட்ட காலத்தில், இது 3 மடங்கு அதிகரித்திருக்கிறது. 

சென்னை போன்ற மெட்ரோ சிட்டியில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகமாக பொது போக்குவரத்தை பயன்படுத்துவதுதான் இதைக் குறைக்க சிறந்த வழி! அதை ஊக்குவிப்பதற்காகதான், எம்டிசி மூலமாக, முதற்கட்டமாக 120 மின்சாரப் பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறோம். மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனால், மேலும் 600 மின்சாரப் பேருந்துகளை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்போகிறோம். இதனால், போக்குவரத்து நெரிசலும் குறையும், காற்று மாசும் குறையும், எல்லோருடைய நேரமும் மிச்சமாகும். 

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு இவ்வளவும் செய்திருப்பதால்தான், மத்திய அரசே நமக்கு சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். நிதி ஆயோக் வெளியிட்டிருக்கும் ஹெச்டிஜி தர பட்டியலில் (HTG Rank)-இல் சுற்றுச்சூழல் நடவடிக்கை(Climate Action) மற்றும் சுத்தமான ஆற்றல்(Clean Energy) ஆகிய இலக்குகளில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. 

உலகப் புகழ்பெற்ற ‘தி எகனாமிஸ்ட்' (The Economist) போன்ற இதழ்களும் நம்முடைய திராவிட மாடல் வளர்ச்சியைப் பாராட்டுகிறார்கள். நான் எப்போதும் சொல்வதுதான்:  "நம்முடைய அரசுக்கு வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது மற்றொரு கண்" இயற்கை வளப் பாதுகாப்புடன் இணைந்த வளர்ச்சிதான், எதிர்கால சந்ததிகளுக்கான உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியும். 

பிரேசிலில் நடைபெற்ற “UN Climate Change Conference (COP 30)” மாநாட்டில், உலகளாவிய காலநிலை மாநாடு(Global Climate Council) உருவாக்க வேண்டும் என்று பிரேசில் முன்மொழிந்திருக்கிறார்கள். ஆனால்,
3 ஆண்டுகளுக்கு முன்பே காலநிலை ஆட்சி மன்றக் குழுவை உருவாக்கி, உங்களின் அறிவுரைகளை எல்லாவற்றையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்! அதன் முடிவுதான் நமக்கு கிடைக்கும் பாராட்டுகளும், உலக அங்கீகாரங்களும்! 

இப்போதுகூட, நம்முடைய கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகுவுக்கு, ஐ.நா.வின் உயரிய விருது கிடைத்திருக்கிறது. நம்முடைய அரசுக்கு கிடைக்கும் நல்ல பெயருக்கு உங்களின் ஆலோசனைகள்தான் முக்கியக் காரணம். அதற்காக என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இது தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

புவி வெப்பமயமாதலைப் பொருத்தவரை, தமிழ்நாடு
2070 ஆம் ஆண்டிற்கு முன்பே, ‘நெட் ஜீரோ’ இலக்கை அடைய வேண்டும்! கடந்த 4 ஆண்டுகளாக, கொள்கை, செயல்பாடு- இரண்டிலும் விரிவாக பணியாற்றி இருக்கிறோம். நம்முடைய அரசு வருவதற்கு முன்பு, இதற்கான நிதி ஒதுக்கீடும் மிகவும் குறைவாகதான் இருந்தது. ஆனால், திராவிட மாடல் அரசில் 500 கோடி ரூபாய் வரை இதற்காக ஒதுக்கியிருக்கிறோம். மாநில அரசின் நிதியிலிருந்தே நம்முடைய முன்னெடுப்புகளை எல்லாம் மேற்கொண்டு இருக்கிறோம் என்பதுதான் மிக முக்கியமானது. 

நமது மாநிலத்தை பாதித்த பேரிடர்களுக்கான நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசு கேட்டதில் வெறும் 17 விழுக்காடுதான் மத்திய அரசு விடுவித்திருக்கிறது. நாம் கேட்டது 24 ஆயிரத்து 679 கோடி ரூபாய். அவர்கள் வழங்கியது வெறும் 4 ஆயிரத்து 136 கோடி ரூபாய் மட்டும்தான்! 

எத்தனையோ சவால்களை எதிர்கொண்டு தமிழ்நாடு போராடியிருக்கிறது! வென்றிருக்கிறது! நாட்டிற்கே வழிகாட்டி இருக்கிறது! அதுபோல், இந்த காலநிலை மாற்றச் சவால்களையும் எதிர்த்து, தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!" என்று பேசியிருக்கிறார்.

Summary

Climate Change: CM stalin speech about TN govts actions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com