

காரைக்குடியிலிருந்து கொடைக்கானல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் முன்பக்க டயர் ஒன்று திடீரென வெடித்துக் கழன்று தனியாக ஓடியதால் பயணிகள் பீதியடைந்தனர். இருப்பினும், ஓட்டுநர் சுதாரித்துக்கொண்டு பேருந்தைச் சாமர்த்தியமாகக் கட்டுப்படுத்திப் பாதுகாப்பாக நிறுத்தியதால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இன்று காலை காரைக்குடியிலிருந்து கொடைக்கானல் நோக்கி அரசுப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. இந்தப் பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். கோபால்பட்டி அருகே மேட்டுக்கடை என்ற இடத்தில் காலை 10 மணியளவில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநர் இருக்கைக்குக் கீழுள்ள முன்பக்க டயர் ஒன்று வெடித்துக் கழன்று தனியாக ஓடியது.
இதைக் கண்ட பயணிகள் அலறியடித்துக்கொண்டு கூச்சலிட்டனர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர், பேருந்தை ஒருவழியாகச் சமாளித்து சுமார் 10 மீட்டர் தொலைவில் மீதமுள்ள டயர்களுடன் ஓட்டிச் சென்று பாதுகாப்பாக நிறுத்தினார். இதனால் நல்வாய்ப்பாகப் பயணிகள் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
பின்னர், அவ்வழியே வந்த வேறு அரசுப் பேருந்துகளில் பயணிகளை அனுப்பி வைத்தனர். அரசுப் பேருந்துகளில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதால், போக்குவரத்துத் துறை நிர்வாகம் பேருந்துகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் எனப் பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, கொடைக்கானல் போன்ற மலைப்பாதையில் செல்லும் பேருந்துகளில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதால், பயணிகள் இடையே மிகுந்த அதிர்ச்சியும் அச்சமும் நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.