

தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும். மாயபிம்பம் என அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சி 12 வது வார்டில் பல்நோக்கு அலுவலக பயன்பாட்டுக் கட்டிடத்தைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று திறந்து வைத்தார்.
அலுவலகத்தைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்,
தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. மாயபிம்பம் என எந்த தரவும் இல்லாமல் போகின்ற போக்கில் கூற முடியாது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் தொடக்கப் பள்ளியில் பள்ளி இடை நிற்றல் பூஜ்யமாக உள்ளது. இந்திய அளவில் உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் 14 சதவீதமாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் தான் 7.7 சதவீதமாக உள்ளது. அதையும் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எதையும் விளம்பரத்திற்காகக் கூறக்கூடிய அரசு தமிழ்நாடு அரசு இல்லை.
திருவள்ளுவர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவன் பள்ளி சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையாக உள்ளது. 2014-2015 ஆம் ஆண்டு நபார்டு நிதியில் அந்த பள்ளிகள் கட்டப்பட்டது. சுவர் இடிந்து விழுந்த இடத்தில் கட்டுமான பொருள்கள் இருந்துள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்பு தான் அந்த கட்டுமான பொருள்களை எடுத்துச் சென்றுள்ளார்கள். அது பாதுகாப்பான இடம் என நினைத்து மாணவர்கள் அங்குச் சென்று அமர்ந்துள்ளார்கள் அப்போது எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த சம்பவத்தில் அஜாக்கிரதையாக யார் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது அந்த மாணவனின் குடும்பத்திற்குப் பக்கபலமாக இருப்போம் இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிக்க: ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.