

தவறான சிகிச்சை அளித்த நிகழ்வில் வலது கையை இழந்த இளைஞரின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் 34 ஆண்டுகளுக்கு பின் தீர்வு கிடைத்திருக்கிறது. இழப்பீடாக பணம் வேண்டாம், வேலை தாருங்கள் என இளைஞர் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த இளைஞர் விவகாரத்தில் இலவச சட்ட உதவி மையம் தொடர்ந்து உதவி செய்து வந்ததாக பெற்றோர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆபரண நகை தயாரிப்பு தொழிலாளி ஜெகநாதன் - சாந்தி தம்பதியினர். இவருக்கு 1987ல் திருமணமாகிய நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 1991 ல் தினேஷ் என்ற மகன் தாய் சேய் நல நிலையத்தில் பிறந்தார்.
பிறந்த மூன்றாம் நாள் தொடர் அழுகை காரணமாக காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அவரது பெற்றோர்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி அவருக்கு குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர்.
குழந்தை நலனில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், அங்கிருந்து வந்து தனியார் மருத்துவரை அணுகி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு அனுமதித்த போது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை கையில் செலுத்தப்பட்ட ஊசி காரணமாக தொற்று ஏற்பட்டு அவரது வலது கையை நீக்கம் செய்யும் அளவிற்கு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குழந்தை உயிருடன் இருந்தால் போதும் என்ற நிலையில் அதற்கு சம்மதித்து அவரது முழங்கை கீழ் அறுவை சிகிச்சை செய்து நீக்கி உள்ளனர். மேலும் தவறான மருத்துவ சிகிச்சை காரணம் என அங்குள்ள மருத்துவர்கள் அவருடைய பெற்றோரிடம் தெரிவித்ததின் பேரில் அவர்கள் முதலில் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு ஆரம்பித்து கடந்த 34 வருடங்களாக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்காடி வந்தனர்.
இவர்கள் இழப்பீடு கேட்ட தொகைக்கு காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றமே இந்த வழக்கை கையாளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி தீப்தி அறிவுநிதி இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட இளைஞர் தினேஷுக்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும், இதனை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை கண்காணிப்பாளர், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மற்றும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஆகியோர் இணைந்து வழக்கு தொடர்ந்த நாள் முதல் 6% வட்டியுடன் வழங்க வேண்டும் என தீர்ப்பு அளித்துள்ளார்.
கடந்த 34 வருடங்களாக பல்வேறு நீதிமன்றங்களுக்குச் சென்று தொடர் சட்டப் போராட்டம் நடத்த தமிழக அரசின் இலவச சட்ட மையம் பெரிதும் உதவியது என அவர்களது பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
மேலும் இளைஞர் தினேஷ் கூறுகையில், கடந்த 34 ஆண்டுகாலமாக தனது தந்தை - தாய் ஆகியோரின் தொடர் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி எனவும், தற்போது அளித்த இழப்பீட்டுத் தொகைக்கு பதிலாக தனக்கு ஏதாவது அரசு வேலை வழங்கினால் கடைசி காலத்தில் தனது பெற்றோருக்கு தான் உதவும் இயலும் என கோரிக்கை வைத்து உள்ளார்.
இலவச சட்ட உதவி மையம் ஒரு ஏழை குடும்பத்திற்கு கடந்த 34 ஆண்டுகளாக உதவிய சம்பவம் பெரிதும் நெகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.