

நான் பேசினால் சினிமா டயலாக் என்று சொல்லும் திமுகவினர், தமிழக முதல்வர் ஸ்டாலின் என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்றீங்க என்று பேசியிருப்பது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? என்று வினா எழுப்பினார் தவெக தலைவர் விஜய்,
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இன்று நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் விஜய், நான் என்ன பேசினாலும் சினிமா டயலாக் என்று விமர்சிக்கிறார்கள் என்று கூறினார்.
பெருந்துறையில் பெருந்திரளான மக்கள் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசினார்.
கடந்த புதுச்சேரி கூட்டத்தில் வெறும் 11 நிமிடங்களே பேசிய நிலையில், இன்று அவரது பேச்சில் ஈரோடு சிறப்பு தொடங்கி அதன் தேவைகள் எனப் பட்டியலிட்டு பிறகு, முதல்வர் ஸ்டாலினையும் விமர்சித்தார். கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் வரை அவரது பேச்சு நீடித்தது.
நான் ஏதாவது பேசினால் அது சினிமா டயலாக்காம். ஆனால், முதல்வர் ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்றீங்க என்று கூறியிருந்தார். இது சினிமா டயலாக் இல்லையாம், நான் பேசினால் சினிமா டயலாக்காம், சார் பேசினால் சினிமா டயலாக் இல்லையாம், சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததாம், அந்த லைன் என்று விஜய் குறிப்பிட்டார்.
என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்றீங்கன்னு சொல்றீங்க. உங்களை எப்படித்தான் சார் புரிஞ்சுக்கிறது. எந்தெந்த விஷயத்தில் எல்லாம் உங்களை நாங்கள் எப்படி புரிந்துகொள்ள வேண்டும். அதையும் கொஞ்சம் நீங்களே சொல்லிவிட்டீர்கள் என்றால் நல்லா இருக்கும் சார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லையே, பொய் வாக்குறுதிகள் கொடுத்தீர்களே, இதில் உங்களை புரிந்து கொள்வதா? ஒன்றைச் சொல்கிறேன், மாநிலத்தில் ஆளும் நீங்களாக இருந்தாலும், மத்தியில் ஆளும் அரசாக இருந்தாலும் முதலில் என்னுடைய கேரக்டரைப் புரிந்துகொள்ள வேண்டும் சார். என்னுடைய கேரக்டர் என்று நான் சொன்னது நம்முடைய மக்களின் கேரக்டரை.
வரும் 2026ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலின் கேரக்டரே கொஞ்சம் வேற மாதிரி சார். அதைக் கொஞ்சம் நீங்க புரிந்துகொள்ளுங்கள் சார், இல்லைனா மக்கள் புரிய வைப்பார்கள் என்ற விஜய், நம்பிக்கையோடு இருங்கள், வெற்றி நிச்சயம் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.